கென்யா கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டிருந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த அவர் 87 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 128 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் 104 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 365 விக்கெட்களை எடுத்து அசத்தினார்.
அதனால் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 4 டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார். அந்த வகையில் ஓரளவு நல்ல அனுபவத்தை கொண்ட கணேஷை கென்யா அணி வாரியம் புதிய பயிற்சியாளராக நியமித்தது இந்திய ரசிகர்களை மகிழ்வித்தது. குறிப்பாக அஜார் ஜடேஜா, ஸ்ரீதர் போன்ற முன்னாள் இந்திய வீரர்களை பயிற்சியாளராக நியமித்து ஆப்கானிஸ்தான் வெற்றிகரமாக செயல்படுகிறது.
ஒரு மாதத்தில் என்னாச்சு:
அதே போல கணேஷ் நியமனத்தால் கென்யா வெற்றி பாதைக்கு திரும்பும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதைத் தொடர்ந்து பயிற்சியாளராக பொறுப்பேற்ற கணேஷ் கென்யாவை 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெற வைப்பதே தம்முடைய இலக்கு என்று கூறியிருந்தார். இந்நிலையில் கென்யா அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து டோட்டா கணேஷ் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது நியமனம் முறையற்றது என்று சொல்லி கென்யா வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றி கணேஷ் அவர்களுக்கு அந்நாட்டு வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில் இயக்குனர் பியர்ல் ஓமாமி கூறியுள்ளது பின்வருமாறு. “28 ஆகஸ்ட் 2024 புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட்ட கென்யா நிர்வாகக் குழுவின் தீர்மானம் மற்றும் கென்ய அரசியலமைப்பின் 5.9, 8.4.3 பிரிவுகளின் கீழ் இது தொகுக்கப்பட்டுள்ளது”
இந்தியருக்கு அவமானம்:
“உங்களது நியமனத்தை நிறைவேற்ற நிர்வாகக்குழு மறுத்து விட்டது என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம். கென்ய நாட்டின் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க நடைமுறைகள் பின்பற்ற வேண்டும். அதனால் திரு மனோஜ் பட்டேலுக்கும் உங்களுக்கும் இடையே 2024 ஆகஸ்ட் 7ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது”
இதையும் படிங்க: 20க்கும் 120க்கும் செட்டாகாது.. கவலையில்லாத சேவாக் என்னோட பெஸ்ட் பேட்டிங் பார்ட்னர் கிடையாது.. பத்ரிநாத் பேட்டி
“எனவே எங்கள் ஆண்கள் தேசிய அணியுடன் எந்த ஈடுபாட்டையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என்று கூறியுள்ளது. மொத்தத்தில் நியமிக்கப்பட்ட ஒரு மாதத்தில் பயிற்சியாளர் பதவியை பதித்துள்ள கென்யா வாரியம் கணேஷ் அவர்களை அவமானப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் அப்படியானால் ஆரம்பத்திலேயே விதிமுறைகளை கவனிக்கவில்லையா? என்று கென்யா வாரியத்தை விமர்சித்து வருகிறார்கள்.



