அந்த 3வது அதிசயத்தை செய்ய வெச்சதே பெருசு.. குட்டிக்கரணம் அடிச்சு முடிச்சுக்காதீங்க.. டாக்டர் எச்சரிக்கை

rishabh pant
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் அப்போட்டியில் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா 5 சதங்கள் அடித்து சாதனை படைத்தது. அதே போல ரிஷப் பண்ட் 2 இன்னிங்ஸிலும் சதத்தை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

முன்னதாக 2025 ஐபிஎல் தொடரின் கடைசிப் போட்டியில் சதத்தை அடித்த ரிஷப் பண்ட் குட்டிக்கரணம் அடித்து வித்தியாசமாகக் கொண்டாடினார். அதே போல முதல் போட்டியில் சதத்தை அடித்த அவர் குட்டிக்கரணம் அடித்து கொண்டாடியது வைரலானது. இரண்டாவது இன்னிங்ஸில் சதத்தை அடித்த போது குட்டிக்கரணம் அடித்து கொண்டாடுமாறு அவரை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

3வது அதிசயம்:

இருப்பினும் லேசான தசைப் பிடிப்பு இருப்பதால் அடுத்த முறை அப்படி கொண்டாடுவதாக சொன்ன ரிஷப் பண்ட் சாதாரணமாக கொண்டாடினார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டை கிரிக்கெட்டில் விளையாட வைத்ததே தங்களைப் பொறுத்த வரை 3வது அதிசயம் என்று மருத்துவர் தின்ஷா பர்திவாலா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் குட்டிக்கரணம் அடித்து மீண்டும் காயமடைந்து கேரியரை முடித்துக் கொள்ளாதீர்கள் என்று மருத்துவர் மறைமுகமாக உச்சரித்துள்ளார்.

2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதிலிருந்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் சுமார் 2 வருடங்கள் குணமடைந்து மீண்டும் விளையாடி வருகிறார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்த தின்ஷா பர்டிவாலா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அறுவை சிகிச்சைக்குப் பின் ரிஷப் பண்ட் நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் உங்களுடைய கை, கால்கள் நன்றாக இருக்கிறது”

- Advertisement -

எச்சரித்த டாக்டர்:

“அது இரண்டுமே அதிசயம் தான் என்று அவரிடம் சொன்னேன். உங்களை கிரிக்கெட்டில் மீண்டும் விளையாட வைத்து விட்டால் அது எங்களுடைய 3வது அதிசயம் என்றும் அவரிடம் சொன்னேன். ரிஷப் பண்ட் சிறுவயதிலிருந்தே ஜிம்னாஸ்டிக் விளையாட்டைக் கற்றவர். பார்ப்பதற்கு கொஞ்சம் பருமனாக தெரிந்தாலும் சுறுசுறுப்பானவர். சமீப காலங்களில் சதத்தை அடித்த பின் அவருடைய கொண்டாட்டத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

இதையும் படிங்க: அவ்ளோ பெரிய ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட பர்ஸ்ட் கேள்வி இதுதான் – மருத்துவர் அளித்த பேட்டி

“அதை அவர் நன்றாக பயிற்சி செய்த பின் செய்கிறார் என்றாலும் அது தேவையற்றது” என்று மருத்துவ விளக்கங்களுடன் தெரிவித்தார். அப்படி கொண்டாடும் போது சில நேரங்களில் முழங்கால் இடப்பெயர்வு நகர வாய்ப்புள்ளதாகவும் தின்ஷா பர்டிவாலா எச்சரித்துள்ளார். ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ள தின்ஷா பர்டிவாலா அந்தக் கொண்டடத்தை தவிர்க்குமாறு பண்ட்டை கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement