இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்து விட்ட வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது 38 வயதாகும் அவர் அடுத்த 2027-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரை விளையாட விருப்பம் தெரிவித்திருந்தார். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பை தொடரில் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா துவக்க போட்டியில் இருந்து இறுதிப்போட்டி வரை தோல்வியையே சந்திக்காமல் இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தியிருந்தார்.
ரோஹித் சர்மாவின் ஓய்வு எப்போது? : தினேஷ் லாட் பேட்டி
ஆனாலும் சாம்பியன் பட்டத்தினை வெல்லும் கடைசி இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்ததால் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தார். அதனால் அடுத்த 2027 உலகக் கோப்பை தொடரை வென்ற பின்னரே ஓய்வு பெற வேண்டும் என்று முடிவு செய்து தற்போது இந்திய அணியுடன் பயணித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் அடுத்தடுத்த தொடர்களுக்காக தயாராக காத்திருக்கின்றார்.
ஆனாலும் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா அடுத்த உலக கோப்பை தொடருக்கு முன்னதாக 40 வயதை எட்டி விடுவார் என்பதனாலும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதாலும் நிர்வாகம் அவரை ஓய்வை நோக்கி அழுத்துவதாக தெரிகிறது. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.
இப்படி ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அவரது ஓய்வு குறித்து பல்வேறு கருத்துக்களும் சமூக வலைதளத்தில் அதிகளவு வைரலாகி வருகின்றன. அந்த வகையில் ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட் ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெறுவார்? என்பது குறித்த தனது கருத்தினை பேட்டியாக அளித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விதத்தை பார்த்தால் அவர் 2027 உலக கோப்பை தொடரில் விளையாடி விட்டு தான் ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய டி20 தொடரில் கலக்கப்போகும் 3 இந்திய வீரர்கள் இவர்கள் தான் – சுப்ரமணியம் பத்ரிநாத் தேர்வு
அதேபோன்று மற்றொரு வீரரான விராட் கோலியை பலருமே சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். விராட் கோலி எந்த நேரத்திலும், எந்த அணிக்கு எதிராகவும், எந்த மைதானத்திலும் அவரால் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். அவர்கள் இருவருமே மிக முக்கியமான வீரர்கள் என தினேஷ் லாட் கூறியது குறிப்பிடத்தக்கது.



