எதிர்வரும் 2025-ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. ஆசிய கண்டத்தில் உள்ள டாப் 8 அணிகள் விளையாட இருக்கும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. செப்டம்பர் 9-ஆம் தேதியான இன்று துவங்க இருக்கும் இந்த 17-வது ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 28-ஆம் தேதி நிறைவடைய இருக்கிறது.
அதிக ரன்கள்? அதிக விக்கெட்டுகள்? எடுக்கப்போவது யார்? : தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்ளே
இந்த தொடருக்கான சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே துபாய் சென்றடைந்து தற்போது தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படப்போகும் பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்புகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் மற்றும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆசிய கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுக்கப்போகும் பேட்ஸ்மேன் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகும் பவுலர் யார்? என்பது குறித்த தங்களது கணிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்ஷா போக்ளே ஆகிய இருவரும் இணைந்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேனாக சுப்மன் கில்லையும், அதிக விக்கெட்டுகளை எடுக்கப்போகும் பந்துவீச்சாளராக வருண் சக்கரவர்த்தியையும் தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : என்னை பொருத்தவரை இந்த ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் தான் அதிக ரன்கள் குவிப்பார்.
ஏனெனில் அவருடைய பார்ம் மிகச் சிறப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ள அவர் தனது திறமையை நிரூபிக்க இந்த ஆசிய கோப்பை தொடரினை முக்கிய தொடராக பார்ப்பார். எனவே இந்த தொடரில் அதிக ரன்களை குவிக்க அவர் ஆர்வத்துடன் காத்திருப்பார் என தினேஷ் கார்த்திக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஹர்ஷா போக்ளே கூறுகையில் : கில் ஒரு பிராப்பரான பேட்ஸ்மேன். அவருடைய நிலையான ஆட்டம் இந்த தொடரிலும் தொடரும். ஏற்கனவே அவர் சூழலுக்கு ஏற்ப ரன்களை அதிரடியாக குவிக்கும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளார். எனவே எந்த ஒரு அழுத்தமான வேளையிலும் சிறப்பான ஷாட் செலக்சன் மூலம் அதிக ரன்களை குவிப்பார் என ஹர்ஷா போக்ளே கூறினார்.
இதையும் படிங்க : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விடயத்தில் இப்படி நடந்திருக்க கூடாது.. அவர் ஒரு மிகப்பெரிய ஸ்டார் – கெவின் பீட்டர்சன் கருத்து
மேலும் தினேஷ் கார்த்திக் வருண் சக்கரவர்த்தி குறித்து பேசுகையில் கூறியதாவது : ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பாக துபாய் மண்ணில் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஐபிஎல் போட்டிகளிலும் சரி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியிலும் சரி அவர் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அவர்தான் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என தினேஷ் கார்த்திக் கூறினார்.



