
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
குறிப்பாக 40 வயதில் ரோஹித் சர்மாவால் உலகக் கோப்பையில் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே புதிய கேப்டனை உருவாக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ரோஹித் சர்மாவின் கனவு என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். அந்த கனவு 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தோற்றாலும் அணையவில்லை என்று கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2027இல் அந்தக் கனவை நிஜமாக்குவதற்காக தன்னை ஃபிட்டாக மாற்றியுள்ள ரோஹித் சர்மாவை இந்திய அணி கழற்றி விட்டு மிஸ் செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி க்ரிக்பஸ் இணையத்தில் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோற்றது முதலே நாம் ஒரு உலகக் கோப்பை வெல்லும் அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது ரோஹித் சர்மாவின் கனவாகும். அதை அவர் வெஸ்ட் இண்டீஸில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று சாதித்தார்”
“இருப்பினும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கான நெருப்பு இன்னும் அவருக்குள் எரிந்து கொண்டிருக்கிறது. இனிமேல் ரோஹித்தை ஒரு பேட்ஸ்மேனாக நான் பார்க்க பார்க்க விரும்புகிறேன். ஃபார்மில் இருக்கும் போது அவருடைய ஆட்டம் கவிதை போல இருக்கும். குறிப்பாக பவர்பிளே ஓவர்களில் அவர் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கி அணிக்குத் தேவையான அடித்தளத்தை அமைப்பார்”
“தற்போது அழகாக பரிணமித்துள்ள ரோஹித் சர்மா தன்னுடைய சாதனைக்காக விளையாடுவதில்லை. தன்னுடைய அணியின் வெற்றிக்கு அடித்தளத்தை அமைக்கும் அவர் சுயநலமற்ற நோக்கத்தைக் கொண்டுள்ளார். 2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கூட அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு தம்மால் என்ன கொண்டு வர முடியும் என்பதைக் காட்டும் வகையில் பேட்டிங் செய்தார்”
இதையும் படிங்க: அன்று தான் விராட் கோலி வேற லெவல் பிளேயர்ன்னு புரிஞ்சுகிட்டேன்.. 2017 மாஸ்டர்க்ளாஸ் பற்றி ஆஸி வீரர் பேட்டி
“எனவே ரோஹித் சர்மா மிகவும் மதிப்புடைய பேட்ஸ்மேன் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பைக்கு இன்னும் தூரம் இருக்கிறது. ஆனால் அவர் தன்னுடைய மனதை வைத்து தொடர்ந்து ஃபிட்னஸில் வேலை செய்தால் உலகக் கோப்பைக்கு தயாராவார். தற்போது இடைவெளிக்குப்பின் மீண்டும் விளையாட வருவது அவரிடம் புத்துணர்ச்சி மற்றும் பசியை ஏற்படுத்தும்” என்று கூறினார்.