ஐபிஎல் தொடரின் (எட்டாவது லீக்) 8 ஆவது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்களை குவித்தார். வார்னர் 36 ரன்களையும், சஹா 30 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது.
இந்த சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. துவக்க வீரரான சுப்மான் கில் ஆட்டமிழக்காமல் 62 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அசத்தினார். மேலும் மோர்கன் 29 பந்துகளில் 42 ரன்கள் குவித்து கொல்கத்தா அணி வெற்றி பெற உதவினார் .ஆட்டநாயகனாக சுப்மான் கில் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறியதாவது : அணி வெற்றி பெறும் போது எப்போதும் அது ஒரு மகிழ்ச்சியான விடயம் தான். நாங்கள் இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்து இருக்கிறோம். அந்த உழைப்பிற்கு பரிசாக இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.
மேலும் இந்த போட்டியில் எங்களுக்கு சாதகமான விடயம் என்னவெனில் ஆல்ரவுண்டர்களை சரியாக உபயோகித்து தான். அவர்களை எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறினார். மேலும் இளம் வீரர்களை பற்றி பேசும் பொழுது நிச்சயம் இந்த தொடரின் மூலம் பல இளைஞர்களை வளர்க்க முடியும்.
இந்த தொடர் ஒரு சிறப்பான பயணம் எங்களது அணி நிர்வாகத்திற்கு நன்றி கூறியே ஆக வேண்டும். ஏனெனில் இளம் வீரர்களை அணியில் ஆட வைக்க அவர்கள் ஒத்துழைக்கின்றனர். மேலும் அதே போன்று இளம் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். சுப்மன் கில் அவரது கிரிக்கெட் வாழக்கையை மகிழ்ச்சியுடன் பயணிக்கவேண்டும். ஒருமுறை நடக்கவும் ஆவதால் அவர் மோசமான பிளேயர் கிடையாது. என்னுடைய ஆட்டத்திலும் நான் சற்று முன்னேறி சிறப்பாக ஆடி ரன்களை குவிக்க வேண்டும் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.