
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 471 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதலில் 465 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியானது 6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்நிலையில் நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் ஓவருக்கு 4.5 ரன்கள் வீதம் ஸ்கோர் செய்து அதிரடியான ஆட்டத்தை விளையாடி இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் மொத்தமாகவே 100 ஓவர்கள் வரை வீசியிருந்தது.
ஆனாலும் இந்த முதல் இன்னிங்சில் நான்காவது வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் 6 ஓவர்கள் மட்டும் வீசியது பெரியளவு பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் குறைந்தது 20 ஓவர்களுக்கு மேல் வீசியிருந்த வேளையில் ஷர்துல் தாகூருக்கு மட்டும் 6 ஓவர் கொடுக்கப்பட்டது.
இப்படி நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவருக்கு 6 ஓவர்களை மட்டுமே வீச வழங்கியது பலரது மத்தியிலும் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் கூறுகையில் : நேற்றைய போட்டியின் போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடைபெற்றது. தேநீர் இடைவேளைக்கு முன்பாக ஷர்துல் தாகூர் பந்துவீச தயாரானதும் அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் பும்ராவை பந்துவீச சுப்மன் கில் அழைத்தார்.
இப்படி ஷர்துல் தாகூரை பந்துவீச விடாமல் தடுத்து பும்ராவை அழைத்தது மிகப்பெரிய தவறு. ஏனெனில் ஷர்துல் தாகூர் எதற்காக அணியில் இருக்கிறார்? ஒரு வீரர் மீது நம்பிக்கையில்லை என்றால் அவரை எதற்கு அணியில் சேர்க்க வேண்டும்? நிச்சயமாக இது ஒரு பிரச்சனை தான். மற்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசும் போது நான்காவது வேகப்பந்து வீச்சாளருக்கு குறிப்பிட்ட அளவிலேயே ஓவர்கள் கொடுக்கப்படும் அது உண்மைதான்.
இதையும் படிங்க : சின்ன பசங்க தான.. போக போக கத்துப்பாங்க.. ஜெய்ஸ்வால் செய்த தவறு குறித்து – பெருந்தன்மையாக பேசிய பும்ரா
ஆனாலும் இந்த போட்டியில் அவருக்கு 6 ஓவர் மட்டுமே கொடுத்தது வருத்தமாக இருக்கிறது. அவர் அந்த 6 ஓவரிலும் சிறப்பாக பந்துவீசவில்லை என்றாலும் மேலும் சில ஓவர்களை கொடுத்திருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாத பவுலரை அணியில் தேர்வு செய்திருக்கக் கூடாது என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.