
இந்திய அணியின் அனுபவ மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்தார். அந்த வகையில் அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்த அவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் ஏமாற்றத்தை அளித்திருந்தார். இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்திருந்த அவருக்கு நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் அதில் கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே அவர் அரைசதம் அடித்தார். மற்றபடி எந்த ஒரு போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படவில்லை. இதன் காரணமாக அவரது செயல்பாடு மீது ஏமாற்றம் அடைந்த இந்திய அணியின் நிர்வாகமானது இந்தியாவில் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் வழங்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த கருண் நாயர் தனது வருத்தத்தையும் சமூகவலைதளத்தின் மூலம் பகிர்ந்திருந்தார். அவரை தேர்வுசெய்யாத நிர்வாகம் தேவ்தத் படிக்கலை தேர்வு செய்து அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளதையும் மறைமுகமாக காண்பித்துள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் கருண் நாயர் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : கருண் நாயர் விடயத்தில் உண்மை யாதெனில் இனி அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காது. இதை ஏற்றுக்கொள்ள அவருக்கு கடினமாகத்தான் இருக்கும். ஆனாலும் தேர்வுக்குழுவினர் அவரை விட்டு நகர்ந்து விட்டனர் என்பதை அவர் புரிந்து கொண்டாக வேண்டும். இங்கிலாந்து தொடர் கடினமான தொடர் என்றாலும் அந்தத் தொடரில் அவர் ஓரளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்ய தவறிவிட்டார். இந்தியாவில் நடைபெற இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் விளையாடினால் நிச்சயம் ரன்களை குவிக்க முடியும். ஆனாலும் நிர்வாகம் வழங்கிய வாய்ப்பில் அவர் சிறப்பாக செயல்பட தவறியதால் தேர்வுக்குழு அவரை விட்டு நகர்ந்து விட்டது மேலும் அவரது இடத்தினை தற்போது தேவ்தத் படிக்கல் போன்ற ஒரு இளம் வீரருக்கு வழங்கி உள்ளது.
இதையும் படிங்க : பைனலில் வென்று கோப்பையை வாங்க மேடைக்கு வந்தால் சூரியகுமார் என்ன செய்வார்? – புறக்கணிக்க வாய்ப்பிருக்கா?
ஏற்கனவே ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக தேவ்தத் படிக்கல் 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளதால் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்து தற்போது இந்திய அணி அவரை நோக்கி நகர்ந்துவிட்டது என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.