CWC 2023 : ஜடேஜா பற்றி முன்கூட்டியே கணித்து வியப்பில் ஆழ்த்திய டிகே.. கல்யாணம் எப்போ என கேட்ட ரசிகர்

Dinesh Karthik.jpeg
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49.3 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்தார்.

மறுபுறம் பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 200 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, இசான் கிசான், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 2/3 என ஆரம்பத்திலேயே தடுமாறியதால் வெற்றி பெற முடியுமா என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டது

- Advertisement -

டிகே கணிப்பு:
இருப்பினும் மிடில் ஆர்டரில் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய சவாலை கொடுத்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 85* ரன்களும் கேஎல் ராகுல் 97* ரன்களும் எடுத்து 41.2 ஓவரிலேயே இந்தியாவுக்கு அபாரமான வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இந்த வெற்றிக்கு 97 ரன்கள் அடித்த ராகுல் ஆட்டநாயகன் விருது வென்றாலும் 3 விக்கெட்டுகளை எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு கட்டுப்படுத்த முக்கிய பங்காற்றினார்.

குறிப்பாக கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவதால் சேப்பாக்கம் மைதானத்தை பற்றி நன்கு தெரிந்திருந்த அவர் அந்த சாதகத்தை பயன்படுத்தி மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் இப்போட்டி துவங்குவதற்கு முன்பாகவே தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சேப்பாக்கம் பிட்ச்சை பார்த்து விட்டு “இது நிச்சயமாக சுழலுக்கு சாதகமாக இருக்கும். அதனால் ஜடேஜாவுக்கு இன்று சூப்பரான நாளாக இருக்கப் போகிறது” என்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டார்.

- Advertisement -

இறுதியில் அவர் சொன்னது போலவே ஜடேஜா 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 28 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் வர்ணனையாளராக மாறியது முதலே நிறைய கணிப்புகளை துல்லியமாக வெளியிட்டு அசத்தி வரும் தினேஷ் கார்த்திக்கின் இந்த கணிப்பும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது.

ஆனால் அந்த கணிப்பை பார்த்து வியந்த ஒரு பாகிஸ்தான் ரசிகர் “டிகே பாய் என்னுடைய கல்யாணம் எப்போது நடக்கும் என்பதையும் சொல்லுங்கள்” என ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு “பாய் போட்டிகளை மட்டுமே கணித்து சொல்ல முடியும். உங்களுக்கு தகுந்த ஜோடி யார் என்பதை சொல்ல முடியாது” என ரசிகருக்கு தினேஷ் கார்த்திக் கலகலப்புடன் பதிலளித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement