இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக 3 – 0 (3) என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தெனாப்பிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. அதிலும் கௌகாத்தியில் இந்தியா 408 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது மிகப்பெரிய மோசமான சாதனை தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் ஒரு காலத்தில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்பது கடினம் என்று எதிரணிகள் பயந்ததாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது சொந்த மண்ணில் எங்கே தோற்று விடுவோமோ? என்ற பயம் இந்திய அணியில் ஏற்பட்டுள்ளதாக தினேஷ் கார்த்திக் வேதனை தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்களை விளக்கியுள்ள அவர் இந்த நிலைமையை மாற்றுவதற்கு தேவையான முடிவெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பயத்தைக் காட்டிய இந்தியா:
இது பற்றி தம்முடைய இன்ஸ்டாகிராமில் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு எதிரணிகள் பயப்பட்டன. தற்போது அவர்கள் இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிக்கலாம் என்று நினைக்கின்றனர். அதாவது 12 மாதங்களுக்குள் நாம் 2 ஒயிட்வாஸ் தோல்விகளை சந்தித்துள்ளோம்”
“கடைசி 3 தொடர்களில் 2 ஒய்ட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ள இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் கடினமான நேரத்தில் இருக்கிறது. இனிமேல் நாம் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும். நம்மிடம் தரமான வீரர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? சுழல் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லையா? நாம் அதிகப்படியான ஆல் ரவுண்டர்களை விளையாட வைக்கிறோம்”
பயப்படும் இந்தியா:
“உள்ளூரில் ஒரு வருடம் முழுவதும் வெறும் 14 ஓவர்கள் மட்டுமே வீசிய நித்திஷ் ரெட்டியை நாம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்றழைக்கிறோம். இத்தொடரில் வெறும் 2 இந்தியர்கள் மட்டுமே 100 ரன்கள் அடித்துள்ளார்கள். ஆனால் 7 தென்னாப்பிரிக்க வீரர்கள் 100 ரன்கள் அடித்துள்ளனர். உண்மையில் அதை விட நாம் நன்றாக விளையாட முடியும். திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் ஏன் இந்த மூக்கடைப்பு?”
“டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை நடைபெற்ற 65 போட்டிகளில் இந்தியா தான் 3வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் 26 என்ற மோசமான சராசரியைக் கொண்டுள்ளது. 3வது இடத்தில் நாம் சுந்தர், சுதர்சன் ஆகியோரை களமிறக்கினோம். இப்படிப்பட்ட மாற்றங்கள் தான் இந்தியாவின் நிலைத்தன்மையைப் பழக்குகிறதா? இந்த தோல்விகளால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்ல குறைவான வாய்ப்புகளே உள்ளது”
இதையும் படிங்க: விராட், ரோஹித், டிராவிட்டால்.. இந்தியா பெற்ற வெற்றியை உங்க பெயரில் எழுதாதீங்க.. கம்பீரை விளாசிய திவாரி
“அடுத்ததாக 7 மாதங்கள் கழித்து இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடப் போகிறது. அப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அசத்தியிருப்போம் என்பதால் நாம் இதை மறக்கப் போகிறோமா? என்பது கேள்வியாகும். சிந்தியுங்கள். இந்தியா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதற்கான வழியை ஏற்படுத்துங்கள்” என்று கூறினார்.



