இலங்கைக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றி நடை போடத் துவங்கியுள்ளது. இருப்பினும் அந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் சுமாராக விளையாடியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2015ஆம் ஆண்டு அறிமுகமான அவருக்கு இதுவரை இந்திய அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமாகும். ஆனால் அவரும் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்பதும் உண்மையாகவே இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக இந்த தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பு பெறாத அவர் 2வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி கோல்டன் டக் அவுட்டானார்.
கேரியர் முடிகிறதா:
அதை விட 3வது போட்டியிலும் டக் அவுட்டான அவர் விக்கெட் கீப்பிங்கில் 3 கேட்ச்களை கோட்டை விட்டார். இருப்பினும் அப்போட்டியில் இதர வீரர்களின் சிறந்த செயல்பாடுகளால் இந்தியா வென்றது. ஒருவேளை அப்போட்டியில் தோற்றிருந்தால் அதற்கு சஞ்சு சாம்சன் காரணமாக இருந்திருப்பார் என்றே சொல்லலாம். மேலும் கடந்த ஜிம்பாப்வே தொடரில் தொடர்நாயகன் விருது வென்ற வாஷிங்டன் சுந்தருக்கே இலங்கை தொடரில் முழுமையாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மெகா சொதப்பலை அரங்கேற்றிய சஞ்சு சாம்சனுக்கு இனிமேல் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் கேரியர் முடிவதற்கு வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கைத் தொடரில் சுமாராக விளையாடியதால் சஞ்சு சாம்சன் மோசமான வீரராகி விடவில்லை என்று தினேஷ் கார்த்திக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதுத்துடன் 29 வயதாகும் சாம்சனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் தமக்கு சந்தேகமில்லை என்றும் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் உங்களுக்கு ரிஷப் பண்ட் நன்றாக செயல்படுவதால் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆனால் சஞ்சு சாம்சன் போராடக் கூடியவர் என்பதை உங்களுக்கு நான் சொல்வேன்”
இதையும் படிங்க: அவரோட பேச்சை கேட்டது தப்பா போச்சு.. சூப்பர் ஓவருக்கே போகாம ஜெய்க்க வேண்டியா மேட்ச்.. ஜெயசூர்யா வருத்தம்
“எனவே தமக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக அவர் நன்றாக செயல்படுவார். 2, 3வது டி20 போட்டியில் அவுட்டானதால் அவருக்கு அது மோசமான தொடராக அமைந்தது என்று அர்த்தமில்லை. அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. அவரால் இது போன்ற சூழ்நிலைகளை நன்றாக கையாள முடியும். இந்தியாவுக்காக அவர் நன்றாக செயல்படுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.



