வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. முன்னதாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் வங்கதேசம் தோற்கடித்தது.
அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று வங்கதேசம் வரலாறு படைத்தது. அத்துடன் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு தொடரை வென்று வங்கதேசம் சாதனை படைத்தது. அந்த சூழ்நிலையில் பாகிஸ்தானை போலவே அடுத்ததாக இந்தியாவையும் அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ கூறியிருந்தார்.
பாகிஸ்தான் நினைப்பு:
குறிப்பாக 2022 ஒருநாள் தொடரில் இந்தியாவை தோற்கடிக்க மெஹதி ஹசன் முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருது வென்றார். அப்படிப்பட்ட திறமையான அவர் பாகிஸ்தான் தொடரில் தொடர்நாயகன் விருது வென்று வெற்றியில் பங்காற்றினார். எனவே முஸ்பிகர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், மெஹதி ஹசன் உள்ளிட்ட வீரர்களை வைத்து இந்தியாவை வீழ்த்துவோம் என்று நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தானை போல இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வங்கதேசத்தால் வீழ்த்த முடியாது என தினேஷ் கார்த்திக் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் வங்கதேச அணி இந்தியாவுக்கு கடினமான சவாலை கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை”
தரமான இந்தியா:
“ஏனெனில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகப்பெரிய வேலையாகும். பாகிஸ்தான் மண்ணில் வங்கதேசம் சிறப்பாக விளையாடியிருக்கலாம். அதற்காக இந்தியாவை அவர்கள் அதிகம் தொந்தரவு செய்வார்கள் என்று நான் நம்பவில்லை” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2012க்குப்பின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட உலகின் எந்த அணிக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் ஒரு தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது.
இதையும் படிங்க: இதெல்லாம் நியாயமில்ல.. தோனி – ரோஹித் சர்மா ஆகியோரில் சிறந்த கேப்டன் யார்? பியூஸ் சாவ்லா கருத்து
அத்துடன் தற்சமயத்தில் பாகிஸ்தான் அணி சுமாரான ஃபார்மில் இருக்கும் நிலையில் அந்நாட்டில் உள்ள மைதானங்கள் தார் ரோட் போல உள்ளன. ஆனால் இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் இங்குள்ள மைதானங்கள் தரமானதாக இருக்கும். அதனால் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வங்கதேசம் வீழ்த்துவது மிகமிக கடினம் என்று சொல்லலாம்.