
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா போராடி சமன் செய்தது. குறிப்பாக கடைசி போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிராக்கள் வெற்றி பெற்றது. அதன் காரணமாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மிகப்பெரிய விமர்சனங்களில் இருந்து தப்பியுள்ளார் என்று சொல்லலாம்.
ஏனெனில் பயிற்சியாளராக வந்தது முதல் அவருடைய வழிகாட்டுதலில் இந்திய அணி ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளில் அவருடைய தலைமையில் இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் ஒய்ட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. ஆஸ்திரேலியாவில் 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா கோட்டை விட்டது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் கௌதம் கம்பீர் வெற்றியைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம், முதலில் இந்தியா தோல்வியை சந்திக்கக்கூடாது என்ற எண்ணத்துடனேயே அணியை தேர்ந்தெடுத்ததாக தினேஷ் கார்த்திக் விமர்சித்துள்ளார். ஏனெனில் வெற்றிக்கு 20 விக்கெட்டுகள் எடுக்க வேண்டுமென சொல்லும் கம்பீர் அதற்காக குல்தீப்பை எடுக்கவில்லை என்று கார்த்திக் கூறியுள்ளார்.
மாறாக 5 போட்டிகளிலும் கௌதம் கம்பீர் இந்திய அணியின் பேட்டிங்கை பலப்படுத்துவதிலேயே குறியாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இப்படியே தொடர்ந்தால் கம்பீர் பயிற்சியாளராக தொடர்வது கடினம் என்று கார்த்திக் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் தோல்வியை சந்திக்கக் கூடாது என்பதற்காக அணியை தேர்ந்தெடுத்தார்கள் என்று உங்களால் வாதிட முடியும்”
“இந்திய கிரிக்கெட்டில் தற்போது நடக்கும் அனைத்துக்கும் கௌதம் கம்பீர் பொறுப்புடையவர். எனவே அணி நன்றாக செயல்பட்டால் அதற்கான பாராட்டுக்கள் அவரைச் சேரும். சொதப்பினால் கம்பீர் கையை உயர்த்தி தவறு செய்து விட்டோம் என்பதைச் சொல்ல வேண்டும். கில் தலைமையிலான இந்த இந்திய அணியில் அவர் தான் மொத்த கட்டுப்பாட்டையும் வைத்துள்ளதாக எனக்குத் தெரிகிறது”
இதையும் படிங்க: சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோருக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு – டி20 அணியில் மாற்றம்
“பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக காட்டும் அதே அக்கறையை கௌதம் கம்பீர் 20 விக்கெட்டுகள் எடுப்பதிலும் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அவர் சிறப்பான பயிற்சியாளர் என்பதை முடிவுகளில் நாம் பார்க்கிறோம். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் பயிற்சியாளராகவே இருக்கிறார்” எனக் கூறினார்.