
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்ப்பதற்காக வந்த ஆர்.சி.பி அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மாவை லார்ட்ஸ் மைதான ஊழியர்கள் யார் என்று தெரியாமல் தடுத்து நிறுத்தியதாக ஒரு தகவல் சமூக வலைதளத்தில் கடந்த இரு தினங்களாக அதிகளவில் வைரலாகி வருகின்றது.
அப்படி வெளியான தகவலில் ஜிதேஷ் சர்மா இந்த லார்ட்ஸ் போட்டியை நேரில் காண வந்தபோது மைதானத்திற்குள் நுழைய பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் தான் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் என்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடுகிறேன் என்று பலமுறை கூறியும் பாதுகாவலர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் உள்ளே அனுமதிக்க வில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி ஜிதேஷ் சர்மா தினேஷ் கார்த்திகை அழைத்தும் அவர் கவனிக்காமல் சென்றுவிட்டு பின்னர் திரும்பி வந்து அவரை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படி இந்தியாவில் பிரபலகமாக இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரர் லார்ட்ஸ் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படாதது ஏன்? என்ற ஒரு விவாதமும் இருந்து வந்தது.
இந்நிலையில் உண்மையிலேயே மைதானத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் ஒரு தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை நேரில் காண நான் தான் ஜிதேஷ் சர்மாவை அழைத்தேன். அவர் என்னை காணவே மைதானத்திற்கு வந்திருந்தார்.
நான் அவரை கமெண்ட்ரி பாக்ஸ்சின் கீழே சந்தித்தேன். பிறகு அவரை என்னுடன் அழைத்துச் சென்று அங்குள்ள அனைவரையும் சந்திக்க வைத்தேன். பின்னர் அவர் ஆட்டத்தை சிறிது நேரம் கண்டு விட்டு கிளம்பிவிட்டார். ஜிதேஷ் சர்மா மைதானத்தில் எங்கும் தடுத்து நிறுத்தப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில் இருப்பது மைதானத்தில் நுழைவு வாயில் கிடையாது.
இதையும் படிங்க : 259 ரன்ஸ்.. தீப்தி சர்மா அபார சாதனை.. இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிரணி சாதனை சேசிங் வெற்றி
அது நாங்கள் வர்ணனை செய்யும் இடத்திற்கு கீழே உள்ளது. அவர் அந்த இடத்தில் தான் முதலில் என்னை சந்திக்க வந்தார் என்றும் தினேஷ் கார்த்திக் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.