அந்த மைதானத்தில் அதுவே கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம்.. ஓய்வு பற்றி டிகே மறைமுக அறிவிப்பு

Dinesh Karthik
- Advertisement -

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கியது. மார்ச் 22ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. அதனால் தோனிக்கு பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ருதுராஜ் தலைமையில் முதல் போட்டியிலேயே வெற்றி கண்ட சென்னை கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது.

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 173/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அனுஜ் ராவத் 48, தினேஷ் கார்த்திக் 38* ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக முஸ்தபிசுர் ரஹ்மான் 4விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 174 ரன்களை சேசிங் செய்த சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 37, சிவம் துபே 34*, ரகானே 27, ஜடேஜா 25* ரன்கள் எடுத்து 18.4 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

டிகே அறிவிப்பு:
அதனால் பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அந்த போட்டியில் 78/5 என தடுமாறிய பெங்களூரு 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்பட்டு 38* (26) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

குறிப்பாக பிறந்து வளர்ந்த சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தையும் அங்குள்ள சூழ்நிலைகளையும் நன்கு தெரிந்த காரணத்தால் அவர் சிறப்பாக விளையாடி பெங்களூருவை ஓரளவு காப்பாற்றினார் என்றே சொல்லலாம். முன்னதாக 38 வயதை கடந்துள்ள அவர் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியானது. எனவே சொந்த ஊரான சேப்பாக்கத்தில் இதுவே உங்களுடைய கடைசி போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

- Advertisement -

அதற்கு தினேஷ் கார்த்திக் பதிலளித்தது பின்வருமாறு. “இது சிறப்பான கேள்வி. இருப்பினும் இது கடைசிப் போட்டியாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றின் சில போட்டிகள் இங்கே நடைபெற உள்ளது. ஒருவேளை அதில் நான் மீண்டும் விளையாட வந்தால் அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம். இல்லையென்றால் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: 246.66 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய ரச்சின் ரவீந்திரா.. சின்னத்தல ரெய்னாவின் 16 வருட சாதனையை உடைத்து மாஸ் அறிமுகம்

“இந்திய டெஸ்ட் தொடரில் வர்ணனை செய்து கொண்டிருக்கும் போதே ஐபிஎல் தொடருக்காக பயிற்சிகளை செய்தது கடினமாக இருந்தது. அதனால் முதல் போட்டி தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல வழியில் சென்றது நேர்மறையாக அமைந்தது. சில ரன்கள் அடித்தது நல்ல உணர்வை கொடுக்கிறது” என்று கூறினார். இதிலிருந்து இந்த வருடத்துடன் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement