ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. அந்த வாய்ப்பில் லீக் சுற்றின் முடிவில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்துள்ளது. அதனால் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக விளையாட ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.
அந்த அணியின் இந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி பேட்டிங் துறையில் 600க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து முக்கிய பங்காற்றி வருகிறார். பொதுவாகவே நங்கூரமாக விளையாடி தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிப்பதற்கு பெயர் போன விராட் கோலி இம்முறை தேவையான நேரங்களில் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக லக்னோவுக்கு எதிரான கடைசி போட்டியில் பெங்களூரு 228 ரன்களை துரத்தியது.
18 வருடங்களாக கிங் கோலி:
அப்போது துவக்க வீரராக களமிறங்கிய அவர் 10 பவுண்டரியுடன் 54 (30) ரன்களை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி 12 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடி பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் 2008 முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி சராசரியாக வருடத்திற்கு 500 ரன்கள் குவிப்பதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.
அந்த வகையில் தொடர்ச்சியாக பெரிய ரன்களை குவித்து வரும் விராட் கோலி அனைத்து இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி சிறப்பு எனும் வார்த்தைக்கு சராசரியான ஜீனியஸ். 18 ஐபிஎல் தொடர்களில் சராசரிக்கும் மேலாக சராசரியாக விளையாடும் அவர் 9000 ரன்களை அடித்துள்ளார்”
டிகே பாராட்டு:
“அப்படியானால் வருடத்திற்கு அவர் 500 ரன்களை அடித்து வருகிறார். அதை சிலர் 12 சீசன்களில் எடுக்கக்கூடும். மேத்தியூ ஹைடன் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுத்திருப்பார். அவ்வளவு வேகமாக எடுப்பது கடினமானது. ஆனால் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் ரன்கள் எடுப்பது என்பது விராட் கோலிக்கு உத்வேகத்தைக் கொடுக்கக் கூடியதாகும்”
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 கோப்பை அந்த புதிய அணியின் பெயரில் தான் எழுதப்படும்.. சுனில் கவாஸ்கர் கணிப்பு
“வலைப்பயிற்சியில் அவர் எதிர்கொள்ளக் கூடிய சில பந்துகளின் வேகத்தை நானும் எதிர்கொண்டு பார்த்தேன். அதை நினைத்துப் பார்க்கும் போது இவ்வளவு சாதித்த பின்பும் விராட் கோலி எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். விளையாட்டுக்காக ஒரு இளம் பையன் அல்லது பெண் செலவிடும் ஒவ்வொரு நிமிடத்திலும் கடின உழைப்பு, ஆர்வம், அர்ப்பணிப்பு போன்றவை சிறந்த பண்புகள். அந்தப் பண்புகளுக்கு விராட் கோலி சிறந்த உதாரணம்” என்று கூறினார்.



