இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் 2024 டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. எனவே அடுத்த பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றது. ஆரம்பத்தில் அந்தப் பதவிக்கு ஸ்டீபன் பிளம்மிங், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் போன்ற வெளிநாட்டு வீரர்களை நியமிக்க பிசிசிஐ விரும்பியதாக செய்திகள் வந்தன.
அந்த நிலையில் கௌதம் கம்பீர் ஆலோசகராக வந்ததும் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார். அதனால் அவரை இந்தியாவின் அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நேரடியாக அணுகியதாகவும் செய்திகள் வந்தன. சொல்லப்போனால் 2024 ஐபிஎல் ஃபைனல் முடிந்ததும் கௌதம் கம்பீரை நேரில் சந்தித்து ஜெய் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார்.
டிகே ஆதரவு:
அதனால் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் வெளிநாட்டவர்களை விட கௌதம் கம்பீரிடம் உண்மையான நாட்டுப்பற்று இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். எனவே இயற்கையான ஆக்ரோசத்தை கொண்ட அவருடைய தலைமையில் இந்திய அணி நெருப்பாக செயல்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பயிற்சியாளராக அவர் அற்புதமான சாதனைகளை வைத்துள்ளார். லக்னோ 2 வருடங்கள் பிளே ஆஃப் செல்வதற்கு உதவிய அவர் கொல்கத்தா அணிக்கு வந்ததும் எங்களுக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்யுங்கள் என்று ரசிகர்கள் கேட்டனர். இறுதியில் அவருடைய தலைமையில் கொல்கத்தா கோப்பையை வென்றது”
“சுனில் நரேனை ஓப்பனிங்கில் களமிறங்கியது, மிட்சேல் ஸ்டார்க்கை ஏலத்தில் பெரிய தொகைக்கு வாங்கியது போன்ற முக்கிய முடிவுகளில் அவர் இருந்தார். அந்த வகையில் அவர் கொல்கத்தா அணியில் சரியான சமநிலையை உண்டாக்கி அதிரடியாக செயல்பட உதவினார். தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் வரப்போவதாக நான் செய்திகளை பார்க்கிறேன். அவர் அதை செய்ய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்”
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை 2024 : பும்ரா மாதிரி சிராஜை நம்பாம அர்ஷ்தீப்புக்கு அந்த வாய்ப்பை கொடுங்க.. ஆர்பி சிங்
“அவரிடம் அந்த நெருப்பு இருக்கிறது. தேசிய அணியில் அங்கமாக இருந்த அவரிடம் அதிகப்படியான நாட்டுப்பற்று இருக்கிறது. எனவே அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவருடைய தலைமையில் இந்தியா அசத்தும். ஏனெனில் இந்திய அணிக்கு தற்போது தேவைப்படும் நெருப்பு அவரிடம் இருக்கிறது. ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பிருந்ததை விட தற்போது அவர் கொல்கத்தா அணியை ஸ்ரேயாஸ் ஐயர் கையில் சிறந்த அணியாக ஒப்படைத்துள்ளார்” என்று கூறினார்.