உங்களால் இந்தியாவுக்கு அவமானம், உள்ளூரிலேயே சொதப்பிய இந்திய தேர்வுக்குழுவை – ஓப்பனாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத், டிகே

Vengatesh-Prasad
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த நிலையில் அதன் பின் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஐசிசி தொடர்களில் தோல்விகளை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறி வருகிறது. இத்தனைக்கும் சாதாரண இருதரப்பு தொடர்களில் எதிரணிகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்து தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் இந்தியா ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மட்டும் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பலாக செயல்பட்டு மண்ணை கவ்வுவதை வழக்கமாக வைத்திருப்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது.

இதற்கு நட்சத்திர வீரர்களின் சொதப்பலான ஆட்டம் ஐபிஎல் தொடரின் தாக்கம் போன்றவை முக்கிய காரணமாக இருப்பதாக நிறைய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில் தரமான வீரர்கள் இருந்தும் அவர்களை சுமாராக செயல்படும் சில வீரர்களுக்காக கழற்றி விடுவது மற்றொரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக ஒரு வருடத்திற்கு மேலாக சுமாராக செயல்படும் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பு சஞ்சு சாம்சன் போன்றவருக்கு ஒரு மாதம் கூட கிடைப்பதில்லை. அதே போல விராட் கோலி, புஜாரா போன்ற பேட்ஸ்மேன்கள் வருடக்கணக்கில் சொதப்பினாலும் கிடைக்கும் வாய்ப்பு அஸ்வின் போன்ற பவுலர்களுக்கு ஓரிரு போட்டிகளுக்கு மேல் கிடைப்பதில்லை.

- Advertisement -

வெங்கடேஷ் பிரசாத் அதிருப்தி:
அவை அனைத்திற்கும் இந்திய தேர்வுக்குழு நேரடி காரணமாக அமைந்து வருகிறது என்றால் மிகையாகாது. பொதுவாக தேர்வு குழுவில் இருப்பவர்கள் சர்வதேச அளவில் அதிகமாக விளையாடி நிறைய அனுபவத்தை கொண்டிருந்தால் மட்டுமே நல்ல புரிதலுடன் வீரர்களை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் இந்தியாவில் மட்டுமே ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்கு யார் என்றே தெரியாத ஓரிரு போட்டிகளில் விளையாடிய முன்னாள் வீரர்கள் தேர்வு குழுவினராக வருவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வரிசையில் அம்பத்தி ராயுடுவின் கேரியரை முடித்த எம்எஸ்கே பிரசாத்துக்கு பின் பொறுப்பேற்ற சேட்டன் சர்மா பல முரண்பாடுகளை செய்து பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது தற்காலிகமாக எஸ்எஸ் தாஸ் தலைமையில் ரசிகர்கள் அறியாத சில முன்னாள் வீரர்கள் தேர்வுக்குழுவில் இருக்கின்றனர். அந்த நிலையில் விரைவில் இந்தியாவின் புகழ்பெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பையில் விளையாடும் மண்டலங்களுக்கான அணிகளை தேர்வு குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.

- Advertisement -

அதில் தெற்கு மண்டலத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மத்திய பிரதேச அணிக்காக சமீபத்தில் நடைபெற்ற ரஞ்சிக்கோப்பையில் வெறும் 7 போட்டியிடிலேயே 50 விக்கெட்டுகளை எடுத்து அட்டகாசமாக செயல்பட்ட ஜலஜ் சக்சேனாவை தேர்வு குழுவினர் மனசாட்சியின்றி கழற்றி விட்டுள்ளனர். பொதுவாக ரஞ்சி கோப்பையில் அசத்திய வீரர்களுக்கு தான் அதன் தொடர்ச்சியாக துலீப் கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படும். அப்படி பார்த்தால் தெற்கு மண்டல அணியில் முதல் ஆளாக சேர்க்கப்பட வேண்டிய ஜலஜ் சக்சேனா பெஞ்சில் கூட விளையாடும் வாய்ப்பை பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் உள்ளூர் அளவிலேயே தரமான வீரர்களை தேர்ந்தெடுக்காத நீங்கள் எப்படி சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தரமான வீரர்களை தேர்ந்தெடுக்க போகிறீர்கள் என்று தேர்வுக்குழுவினரை விமர்சித்துள்ளார். மேலும் இது போல கைகொட்டி சிரிக்கும் அளவுக்கு இந்திய கிரிக்கெட்டில் பல குளறுபடிகள் நடைபெறுவதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தும் அவர் ரஞ்சி கோப்பை என்பது உபயோகமற்றதாக போய்விட்டதாகவும் இப்படி நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பது அவமானம் என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:குறையில்லாத தங்கமா கேப்டன்ஷிப் செய்றாரு, அதுல மட்டும் முன்னேறுனா போதும் – ரோஹித் சர்மாவுக்கு தெ.ஆ ஜாம்பவான் ஆதரவு

இது பற்றி ட்விட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் நிறைய சிரிக்கும் விஷயங்கள் நடக்கின்றன. அந்த வரிசையில் ரஞ்சிக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்தவர் தெற்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யப்படாதது அரங்கேறியுள்ளது. இது ரஞ்சிக் கோப்பை பயனற்றது என்பதை காட்டுகிறது. என்ன ஒரு அவமானம்” என்று கூறியுள்ளார். அதே போல ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடிய தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை தெற்கு மண்டல அணிக்காக தேர்வு செய்யாத தேர்வுக்குழுவின் முடிவை புரிந்து கொள்ள முடியவில்லை என தினேஷ் கார்த்திக்கும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement