ரெய்னா இல்ல.. தோனி தலைமையில் தனது ஆல் டைம் கனவு இந்திய டி20 அணியை தேர்ந்தெடுத்த தினேஷ் கார்த்திக்

Dinesh karthik
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. இம்முறை அத்தொடர் 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டியளாக நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்ட தம்முடைய ஆல் டைம் கனவு அணியை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ளார்.

தனது அணியில் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தற்போது ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ளது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் அறிமுகமான அவர் சிறப்பாக விளையாடினாலும் ஆல் டைம் அணியில் இடம் பிடிக்கும் அளவுக்கு அசத்திவிடவில்லை என்பதே நிதர்சனமாகும். அதே போல சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் உலகக் கோப்பையிலும் சதத்தை அடித்த முதல் இந்திய வீரராக ரெய்னா சாதனை படைத்தவர்.

- Advertisement -

ஆல் டைம் கனவு அணி:

அப்படிப்பட்ட அவரையும் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அணியில் தேர்ந்தெடுக்கவில்லை. 2வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மாவை தேர்ந்தெடுத்துள்ள அவர் 3வது இடத்தில் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளார். அதில் 2007 டி20 உலகக் கோப்பையை வீரராக இந்தியா வெல்வதற்கு உதவிய ரோஹித் 2024 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்றவர்.

2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் இந்தியாவுக்காக அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்தவர். அவர்களுக்கு அடுத்தபடியாக தற்போதைய கேப்டன் சூரியகுமார் யாதவ் 4வது இடத்தில் தேர்வாகியுள்ளார். இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று போற்றப்படும் அளவுக்கு அசத்தும் அவருக்கு அடுத்தபடியாக 2007 டி20 உலகக் கோப்பை நாயகன் யுவ்ராஜ் சிங் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் தேர்வு:

ஆல் ரவுண்டர்களாக 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் படேல் தேர்வாகியுள்ளனர். 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற ஜாம்பவான் தோனி கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக 2024 டி20 உலகக் கோப்பை தொடர்நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் புவனேஸ்வர் குமார் தேர்வாகியுள்ளனர்.

இதையும் படிங்க: எம்எஸ் தோனி மட்டுமே எங்களிடம் உதவியை கேட்காத ஒரே அரிதான கேப்டன்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு

முழு நேர ஸ்பின்னராக தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இடம் பிடித்துள்ளார். தினேஷ் கார்த்திக் தேர்ந்தெடுத்துள்ள தனது ஆல் டைம் கனவு இந்திய டி20 அணி:
அபிஷேக் சர்மா, ரோஹித் சர்மா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், யுவ்ராஜ் சிங், ஹர்திக் பாண்டியா, எம்எஸ் தோனி (கேப்டன்/தோனி), அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார்

Advertisement