சோதனை செய்ய இதுதான் நேரமா? – ரோஹித் செய்த தவறை சுட்டிகாட்டி விளாசிய – திலீப் வெங்சர்க்கார்

Dilip
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிரணிகளை காட்டிலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் நம்பர் ஒன் டி20 அணியாக விளையாடியதால் எளிதாக கோப்பையை வெல்லும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா அழுத்தமான சூப்பர் 4 சுற்றில் முக்கிய நேரங்களில் சொதப்பி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. தவறான அணி தேர்வு, தேர்வு செய்த வீரர்களை சரியாக பயன்படுத்தாதது, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற அம்சங்கள் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Rohith

- Advertisement -

குறிப்பாக வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய துபாயில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேறிய நிலையில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பதிலாக 3 முழுநேர வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே அணியில் தேர்வு செய்யப்பட்டனர். அதனால் ரன்களை வாரி வழங்கிய ஆவேஷ் கானை அணியிலிருந்து நீக்கிய போது அவருக்கு பதிலாக தேர்வு செய்ய மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அணியின் பெஞ்சில் இல்லாதது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதனால் 3வது வேகப்பந்து வீச்சாளராக காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய ஹர்டிக் பாண்டியாவை பயன்படுத்தும் அவல நிலையும் ஏற்பட்டது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்தது.

இதுதான் நேரமா:
இதிலிருந்து அணியை தேர்வு செய்யும் போதே தேர்வுக்குழு செய்த தவறு அம்பலமான நிலையில் இது பற்றி இலங்கையிடம் தோற்ற பின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் நேரடியாகவே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இதற்கு முந்தைய தொடர்களில் 4 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடியதால் டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக 3 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி சோதித்துப் பார்த்தோம் என்று ரோகித் சர்மா கூலாக பதிலளித்தார். அதனால் கடுப்பான ரசிகர்கள் இந்த சோதனை செய்வதற்கு ஆசிய கோப்பை போன்ற தொடர் தான் கிடைத்ததா? இந்த சோதனைகளை சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் அல்லது விரைவில் நடக்கப் போகும் ஆஸ்திரேலிய தொடர்களில் செய்து பார்த்திருக்கலாமே? என்று அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Bhuvneswar Kumar INDIA

வெங்சர்க்கார் கேள்வி:
அதையே கேள்வியாக எழுப்பியுள்ள முன்னாள் இந்திய கேப்டன் திலீப் வெங்சர்க்கார் அணி நிர்வாகத்தின் இந்த அலட்சியப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த அணியில் தொடர்ச்சியாக சோதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்த அவர்கள் அவரை வைத்து விளையாடவில்லை. அதேபோல் அஷ்வினை காலம் கடந்த பின் இலங்கைக்கு எதிராக பயன்படுத்தினார்கள். தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து உலக கோப்பைக்கு முன்பாக சிறந்த 11 பேர் அணியை தேர்வு செய்ய அணி நிர்வாகம் முயற்சிப்பது தெரிகிறது”

- Advertisement -

“ஆனால் இந்த தொடரும் முக்கியமாகும். ஆசிய கோப்பை என்பது பெரிய தொடராகும். இது போன்ற பெரிய தொடரில் வெற்றி பெறுவது அணியின் தன்னம்பிக்கையை உயர்த்தும். அத்துடன் வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் வீரர்களை அடையாளப்படுத்தும். ஏற்கனவே நான் கூறியதுபோல் ஆசிய கோப்பை மிகப்பெரிய தொடர் என்பதால் நீங்கள் இது போன்ற சோதனைகளை சாதாரண இருதரப்பு தொடர்களில் செய்து பார்த்திருக்கலாம். ஆனால் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் செய்து பார்ப்பது சரியல்ல. ஏனெனில் இந்தப் பெரிய தொடர்களை நீங்கள் நிச்சயம் வெல்லவேண்டும் என்பது முக்கியமாகும்” என்று கூறினார்.

IND vs SL

கடந்த டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறிய கையோடு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் கடந்த ஒரு வருடமாக நடைபெற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் “தரமான வீரர்களை கண்டறியும் சோதனை” என்ற பெயரில் நிகழ்த்தாத மாற்றங்களே கிடையாது. குறிப்பாக மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோரை சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் இருந்தும் தொடக்க வீரர்களாக களமிறக்கியது அதற்கு எடுத்துக்காட்டாகும்.

இதையும் படிங்க : சதங்களின் லேட்டஸ்ட் நாயகன் – சதத்தை ஆக்ரோஷமாக கொண்டாடாத விராட் கோலியின் 3 தருணங்கள்

அப்போது சோதனைகளை செய்ததில் ஒரு நியாயமுள்ளது. ஆனால் இந்த தொடரிலும் அதையே செய்தது தான் ரசிகர்களை கோபமடைய வைக்கிறது. அப்படியானால் ஆசிய கோப்பை முக்கியம் இல்லையா என்று ஆதங்கப்படும் ரசிகர்கள் இந்த குளறுபடிகள் அனைத்தும் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் சொதப்பலான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதாக சாடுகிறார்கள்.

Advertisement