பும்ராவுக்கு பதில் விளையாட அவர்களே தகுதியானவர்கள் – 4 பேர் பட்டியலை வெளியிட்ட திலிப் வெங்சர்கார்

Dilip
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை துவங்குவதற்கு இன்னும் 15 நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில் 2007க்குப்பின் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தயாராகி வருகிறது. ஆனால் அதற்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திர முதன்மை சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியது ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது இடத்தில் நான் இருக்கிறேன் என்ற வகையில் அக்சர் பட்டேல் சிறப்பாக செயல்படுவது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்து வருகிறது. ஆனால் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகுகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது கேப்டன், அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது.

Bumrah

- Advertisement -

ஏனெனில் கடந்த 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை பந்து வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் அளவுக்கு தன்னுடைய அபார திறமை மற்றும் வித்தியாசமான பௌலிங் ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடிக்கும் அவர் நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து வருகிறார். அதிலும் டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளே ஓவர்களில் துல்லியமாக பந்து வீசக்கூடிய அவர் டெத் ஓவர்களில் தரமான யார்கர் பந்துகளால் விக்கெட்டுகளை எடுத்து போட்டியைத் தலைகீழாக மாற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் துருப்புச்சீட்டு பவுலராக போற்றப்படுகிறார்.

மாற்று வீரர்கள்:
இருப்பினும் துரதிஷ்டவசமாக கடைசி நேரத்தில் அவர் வெளியேறியுள்ளதால் அவருக்கு பதில் உலக கோப்பையில் விளையாடப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் ஏற்கனவே ஸ்டேண்ட் பை லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் தீபக் சஹர் அல்லது முகமது சமி ஆகியோர் அனுபவமும் திறமையும் பெற்றுள்ளதால் அவருக்கு பதில் முதன்மை அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் டி20 உலக கோப்பையில் முகமது சமி மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாட தகுதியானவர்கள் என்று முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.

umran

அதிலும் வேகத்திற்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடிய உம்ரான் மாலிக் கச்சிதமாக பொருந்துவார் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அறிமுகமான 2 போட்டிகளில் ரன்களை கொடுத்தார் என்பதற்காக மறு வாய்ப்பு கொடுக்காமல் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்யாமல் கழற்றி விட்டது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கடைசி நேரத்தில் நீங்கள் திடீரென்று சம்பந்தமில்லாத யோசனையை சிந்திக்க முடியாது. இந்த சமயத்தில் நானாக இருந்தால் உம்ரான் மாலிக்கை தேர்வு செய்வேன்”

- Advertisement -

“ஏனெனில் அவரிடம் வேகமுள்ளது. அவர் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசக்கூடியவர். அவரை நீங்கள் தற்போதே தேர்வு செய்ய வேண்டும். மாறாக காலம் கடந்து 130 கி.மீ வேகத்தில் பந்து வீசும் பவுலராக மாறிய பின் அவரை தேர்வு செய்யக்கூடாது. அதேபோல் ஆசிய கோப்பை நடைபெற்ற துபாயில் பச்சை புற்கள் இல்லாத ஃப்ளாட்டான பிட்ச்சில் வேகமில்லாத நிலையில் உங்களுக்கு வேகப்பந்து வீச்சாளர்கள் தேவைப்பட்டது. ஆனால் அங்கு மித வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் நீங்கள் அடி வாங்கினீர்கள். அதனால் பேட்ஸ்மேன்களை வேகத்தால் தோற்கடிக்கக் கூடிய பவுலர்கள் உங்களுக்கு தேவை” என்று கூறினார்.

dilip

அவர் கூறுவது போல் பயிற்சி கொடுத்தாலும் கற்றுக் கொள்ள முடியாத அதிவேகத்தில் வீசும் திறமை பெற்றுள்ள உம்ரான் மாலிக்க்கு ரன்களை கட்டுப்படுத்தும் யுக்தியை பயிற்சி கொடுத்தால் நிச்சயம் தனது வேகத்தால் வேகத்துக்கு கை கொடுக்கக்கூடிய ஆஸ்திரேலிய மைதானங்களின் உதவியுடன் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார் என்றே கூறலாம். அத்துடன் சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்திருக்க வேண்டும் எனக்கூறும் திலிப் வெங்சர்க்கார் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : பும்ராவிற்கு பதிலாக இவரைத்தான் தேர்வு செய்திருப்பேன் – திலீப் வெங்சர்க்கார் அதிரடி

“நல்ல பார்மில் இருந்தும் ஸ்ரேயாஸ் அய்யர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதேசமயம் முகமது சமி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நிச்சயமாக உலகக்கோப்பை அணியில் இருக்க வேண்டும். அதிலும் சுப்மன் கில் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என்று கூறினார்.

Advertisement