இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கும் அத்தொடரின் 4வது போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவாரா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் வித்தியாசமான பவுலிங் ஆக்ஷனைக் கொண்டுள்ள அவர் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடியதால் காயத்தைச் சந்தித்தார். எனவே மீண்டும் காயத்தை தவிர்ப்பதற்காக இத்தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார். அதனாலேயே முதல் போட்டியில் தோற்ற இந்திய அணியைப் பற்றி கவலைப்படாமல் 2வது போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.
முடியலன்னா விளையாடாதீங்க:
அதே போல தற்போது பும்ரா 4வது போட்டியில் விளையாடுவாரா? அல்லது ஓய்வெடுத்து 5வது போட்டிக்கு விளையாடுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் தேர்ந்தெடுக்க வீரர்களில் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். குறிப்பாக காயத்தை சந்திக்காத வரை இந்தியாவுக்காக விளையாடுவது அவசியமென்று அவர் பும்ராவை சாடியுள்ளார்.
மேலும் இந்திய அணியின் நிலையைப் பற்றி கவலைப்படாமல் 2வது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்த கம்பீரையும் அவர் சாடியுள்ளார். இது பற்றி வெங்சர்கார் பேசியது பின்வருமாறு. “பவுலர்கள் தாங்கள் விரும்பும் போட்டியில் விளையாடுவதற்கு நான் சாதகமானவன் கிடையாது. நீங்கள் உடல்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் நாட்டுக்காக அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டும்”
வெங்சர்கார் சாடல்:
“உலகத் தரமான பும்ரா இந்தியாவுக்காக போட்டிகளை வெல்லக்கூடியவர். ஒருமுறை நீங்கள் தேர்வாகிவிட்டால் அனைத்து போட்டிகளையும் விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு சொந்த விருப்பத்திற்கு தகுந்தார் போல் போட்டிகளை தேர்வு செய்யக் கூடாது. இந்தியாவுக்காக விளையாடுவதே முக்கியம். ஒருவேளை ஃபிட்டாக இல்லாவிட்டால் எந்த போட்டியிலும் விளையாடாதீர்கள்”
இதையும் படிங்க: உங்க சுயநலத்துக்காக இந்தியாவை இப்படி தோற்கடிச்சுட்டிங்களே.. கேஎல் ராகுல் மீது உத்தப்பா அதிருப்தி
“முதல் போட்டி முடிந்த பின் 7 நாட்கள் ஓய்வு இருந்தும் 2வது போட்டியில் பும்ரா விளையாடாதது ஏற்றுக்கொள்ள முடியாதது. அகர்கர், கம்பீர் ஆகியோருக்கு வேண்டுமானால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து 4வது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடப்பட்டது.



