- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியை இந்தியாவுக்கு முதல் முறையாக தேர்வு செய்தது எப்படி? பின்னணியை பகிரந்த திலீப் வெங்சர்க்கார்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று துவங்கியது. இந்த போட்டியில் புதிய முழுநேர டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளது.இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்த போட்டியில் களமிறங்கிய விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்திய கிரிக்கெட்டில் ரன் மெஷினாக பல வெற்றிகளில் பங்காற்றி வரும் அவருக்கு இந்த மைல்கல் போட்டியில் சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.

- Advertisement -

100வது போட்டியில் கிங் கோலி:
இதையடுத்து துவங்கிய இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 357/6 ரன்களை எடுத்துள்ள இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது. இன்றைய முதல் நாளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி சதம் அடிப்பார் என அனைவரும் காத்திருந்த வேளையில் 45 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

அவருடன் விளையாடிய ஹனுமா விஹாரி 58 ரன்களில் அவுட்டான போதிலும் கடைசி ஒரு சில மணி நேரங்களில் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடிய ரிஷப் பண்ட் வெறும் 97 பந்துகளில் 96 ரன்களை விளாசி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். அவருடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 45* ரன்களுடன் களத்தில் உள்ளார்.

- Advertisement -

கிங் கோலியை தேர்வு செய்தது எப்படி:
கடந்த 2008ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி அப்போது முதல் இப்போது வரை இந்தியாவின் 3 வகையான கிரிக்கெட்டிலும் பல ஆயிரம் ரன்களை குவித்து பல வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். சொல்லப்போனால் உலக அளவில் 3 வகையான கிரிக்கெட்டிலும் 50+ பேட்டிங் சராசரியை வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேனாக அவர் ஜொலிக்கிறார்.

விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஏதேனும் சாதனை படைக்கும் அவர் இன்று கூட டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6 ஆவது இந்திய வீரராக புதிய சாதனை படைத்தார். அதேபோல் 2014 முதல் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் இந்தியாவை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக 5 வருடங்கள் வலம் வரச்செய்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இப்படி தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக காட்சியளிக்கும் விராட் கோலியை முதல் முறையாக தேர்வு செய்தது எப்படி என்பது பற்றி முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் திலிப் வெங்சர்கார் விவரித்துள்ளார். இதுபற்றி பிசிசிஐ வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறியது பின்வருமாறு. “கொல்கத்தாவில் நடந்த அண்டர்-16 பள்ளி அளவிலான கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலியை முதல் முறையாக பார்த்தேன்.

அந்த சமயத்தில் அவர் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் ஈர்க்க கூடியவராக இருந்தார். அதன்பின் 2008 அண்டர்-19 உலக கோப்பையில் இந்தியாவிற்காக அபாரமாக செயல்பட்ட அவர் கோப்பையை வென்று காட்டினார். அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த வளரும் வீரர்களுக்கான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். அந்த நேரத்தில் நான் தேர்வு குழுவின் சேர்மேனாக இருந்தேன். அப்போது 23 வயதிற்கு உட்பட்ட நிறைய வீரர்களை தேர்வு செய்தோம். ஏனெனில் இந்தியாவுக்காக எதிர்காலத்தில் விளையாட இருக்கும் வீரர்கள் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என நாங்கள் கருதினோம். அப்படித்தான் விராட் கோலி இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார்” என கூறினார்.

- Advertisement -

பாராட்டிய திலிப் வெங்சர்க்கார்:
இளம் வயதிலேயே மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் விராட் கோலி அபாரமாக செயல்பட்ட காரணத்தினாலேயே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார் என திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார். இந்தியாவுக்காக 116 போட்டிகளில் விளையாடி அதில் கேப்டன்ஷிப் பொறுப்பையும் வகித்த அவர் விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதைப் பற்றி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்காக 100 போட்டிகளில் விளையாடுவது என்பது ஒரு மிகச்சிறந்த சாதனையாகும்.

இதையும் படிங்க : 100 மைல்கல் டெஸ்ட் போட்டிகளை நெருங்கியும் தொடாமல் போன ஜாம்பவான்கள் – ஜாம்பவான் வீரர்களின் லிஸ்ட்

இது விராட் கோலியை ஒரு சிறந்த சர்வதேச வீரராக காட்டுகிறது. அவர் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் இளமையாக இருப்பதால் அடுத்த 5 – 6 வருடங்களுக்கு விளையாடுவார். அவர் உலகிலேயே ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்” என கூறினார். தாம் முதல் முறையாக தேர்வு செய்த ஒரு வீரர் இன்று இந்த அளவுக்கு உயர்ந்துள்ளதால் விராட் கோலியை தேர்வு செய்ததற்காக பெருமைப்படுவதாக திலிப் வெங்சர்க்கார் பாராட்டினார்.

- Advertisement -