
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்தியா போராடி சமன் செய்தது. குறிப்பாக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கிள் வெற்றி பெற்றது. அந்தப் போட்டிக்கு முன்பாக இந்திய அணியினர் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்திய பயிற்சியாளர்கள் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை சோதிக்க அருகில் சென்று பார்க்க முயற்சித்துள்ளனர். அதற்கு ஓவல் மைதானத்தின் பராமரிப்பாளர் லீ போர்ட்டிஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் இந்திய பயிற்சியாளர்கள் 2.5 மீட்டர் தொலைவில் நின்று பிட்ச்சை பார்த்து விட்டு செல்லுங்கள் என்றும் அவர் கராராக பேசினார்.
இத்தனைக்கும் இந்திய அணியினர் யாரும் ஆணிகளுடன் கூடிய காலணியைப் பயன்படுத்தவில்லை. அப்படியிருந்தும் அவர் இந்திய அணியினரை தடுத்ததால் கோபமடைந்த தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரிடம் கையை நீட்டி வாக்குவாதம் செய்தார். குறிப்பாக “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எங்களுக்கு நீங்கள் சொல்லாதீர்கள். நீங்கள் வெறும் மைதானப் பராமரிப்பாளர் மட்டுமே, அதற்குத் தகுந்தார் போல் நடந்து கொள்ளுங்கள்” என்று அவரிடம் கம்பீர் கோபமாக பேசினார்.
அந்த நிலையில் கௌதம் கம்பீரின் கோபம் நியாயம் என்றாலும் “கொஞ்சம் நல்ல வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்க வேண்டும்” என்று மேத்தியூ ஹைடன் கூறினார். குறிப்பாக மைதானப் பராமரிப்பாளரிடம் கம்பீர் இன்னும் கொஞ்சம் மரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருக்க வேண்டும் என்று ஹைடன் கூறினார். இந்நிலையில் எதிரணியிடம் ஸ்லெட்ஜிங் செய்து மோசமாக பேசுவதற்கு பெயர் போன ஆஸ்திரேலியர்கள் மரியாதையான வார்த்தைகள் குறித்துப் பேசலாமா? என திலிப் வெங்சர்கார் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டனான அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் என்ற முறையில் கம்பீர் பிட்ச்சை அருகில் சென்று பார்ப்பதற்கான அனைத்து உரிமையையும் கொண்டுள்ளார். பொதுவாக இந்தியா வெளிநாடுகளுக்கு செல்லும் போது கேப்டன், பயிற்சியாளர் மட்டுமின்றி அனைவருமே பிட்ச்சை மிகவும் நெருக்கமாக சென்று பார்ப்பார்கள். சொல்லப்போனால் ஊடகவியலாளர்கள் கூட போட்டி துவங்குவதற்கு முன் பிட்ச்சை நெருக்கமாக பார்ப்பார்கள்”
இதையும் படிங்க: விராட், ரோஹித் இல்லை.. 2 இந்தியர்கள் உட்பட தனது 5 ஆல் டைம் பேட்ஸ்மேன்களை பற்றி பாண்டிங் பேட்டி
“யாரும் எதுவும் சொல்ல முடியாது. எனவே இங்கிலாந்தில் மட்டும் எப்படி வேறு விதிமுறைகள் இருக்க முடியும்? ஒருவேளை அதே மைதான பராமரிப்பாளர் பிட்ச்சை விட்டு தூரமாக நில்லுங்கள் என்று கூறியிருந்தால் ஹைடன் அல்லது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்கள் பணிவுடன் பேசியிருப்பார்களா? ஒருவேளை ஆஸ்திரேலியர்களுக்கு அப்படி நடந்திருந்தால் அவர்கள் மைதானப் பராமரிப்பாளரிடம் குறிப்பிட்ட (மோசமான) வார்த்தைகளைப் பேசியிருப்பார்கள்” என்று கூறினார்.