
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐசிசி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. நீண்ட ஆண்டுகால காத்திருப்பதற்கு பின் தென்னாப்பிரிக்க அணி பெற்ற இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அந்த அணிக்கு பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. எதிருவரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்கும் இந்த தொடருக்காக தற்போது இந்திய அணி தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் குறித்து முன்னாள் இந்திய வீரரான திலிப் தோஷி சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்தவகையில் அவர் கூறியதாவது : தென்னாப்பிரிக்க அணியை போன்று இந்திய அணியாலும் இங்கிலாந்து மைதானத்தில் வெற்றிபெற முடியும். இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு.
ஏனெனில் அணியில் உள்ள சீனியர் வீரர்கள் பலர் ஓய்வு பெற்றுள்ள வேளையில் இந்த தொடரானது இளம் வீரர்களுக்கு சாதிக்க ஒரு களமாக கிடைத்துள்ளது. இருந்தாலும் அனுபவம் இல்லாத இளம் படையை கொண்ட கேப்டன் கில்லுக்கு இந்த இங்கிலாந்து தொடர் ஒரு அக்னி பரீட்சை தான். இங்கிலாந்து சூழலில் அவர்களை எதிர்த்து விளையாடுவது என்பது கடினமான காரியம். அதிலும் குறிப்பாக தற்போதுள்ள இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.
எனவே இந்திய அணிக்கு இந்த தொடர் கடுமையான ஒரு தொடராக மாறியுள்ளது. ஆனாலும் இந்திய அணியால் இந்த தொடரில் சாதித்து காட்ட முடியும் என்று நினைக்கிறேன். இந்த இங்கிலாந்து தொடரை பொருத்தவரை பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இல்லாததால் மூன்றாம் இடத்தில் மூத்த வீரரான கருண் நாயர் விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : சாய் சுதர்சனுக்கு இந்த வாய்ப்பை மட்டும் தாங்க.. அந்த பையன் அசத்துவான் – பிராட் ஹாக் நம்பிக்கை
அதேபோன்று நான்காவது இடத்தில் கேப்டன் சுப்மன் கில் களமிறங்கி விளையாடினால் ஆங்கர் ரோல் செய்து பெரிய இன்னிங்ஸ் விளையாட முடியும். எனவே மூன்றாவது இடத்தில் கருண் நாயரும், நான்காவது இடத்தில் சுப்மன் கில்லும் விளையாட வேண்டும் என திலீப் தோஷி கூறியது குறிப்பிடத்தக்கது.