இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக துவக்க வீரராக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர இளம்வீரர் சாய் சுதர்சன் 759 ரன்கள் குவித்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். அதுமட்டும் இன்றி தமிழ்நாடு அணிக்காக உள்ளூர் போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் முதல் முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது.
சாய் சுதர்சனுக்கு இந்த வாய்ப்பை தாங்க : பிராட் ஹாக் வேண்டுகோள்
அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதன்மை இந்திய அணியில் தேர்வாகியுள்ள சாய் சுதர்சன் தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு பயணித்து அங்கு நடைபெற்று வரும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த பயிற்சிகளின் முடிவில் சாய் சுதர்சனின் செயல்பாடு திருப்திகரமாக அமைந்தால் அவர் முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அறிமுகமாவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் தமிழக இளம் நட்சத்திர வீரரான சாய் சுதர்சன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடினால் அவரது திறனை நிரூபிக்க முடியும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :
சாய் சுதர்சன் உண்மையிலேயே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தகுதியான ஒரு வீரர் தான். ஏனெனில் அவர் பந்தை தாமதமாக விளையாடும் விதமும், பீல்டர்கள் இல்லாத இடைவெளியை கண்டுபிடித்து அடிக்கும் விதவும் அற்புதமாக இருக்கிறது. அதோடு மட்டுமின்றி ஸ்ட்ரைட் பேட், லெஃப்ட் சைடு, ஆப் சைடு என அனைத்து திசைகளிலும் அடிக்கக்கூடிய திறனும் அவரிடம் இருக்கிறது.
பேட்டிங்கில் நல்ல டெக்னிக்கை வைத்திருக்கும் அவர் பந்தை தாமதமாக ஆடுவதால் இங்கிலாந்து மைதானங்களில் அவரால் மிகச் சிறப்பாக விளையாட முடியும் என்று நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி இளம் வீரரான அவருக்கு மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுத்து ஒரு நீண்ட பயணத்தை கொடுத்தால் அவரால் இங்கிலாந்து மண்ணில் சாதித்து காட்ட முடியும்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலியாவில் பட்டதே போதும்.. இங்கிலாந்திலாவது இந்த மாதிரி டீமை செலக்ட் பண்ணுங்க – ஆகாஷ் சோப்ரா அறிவுரை
ஏற்கனவே இந்திய அணியில் அனுபவ வீரர்கள் சிலர் ஓய்வை அறிவித்துவிட்டு வெளியேறியுள்ள வேளையில் இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பிற்கு தற்போது மூன்றாவது இடத்தில் சாய் சுதர்சன் அவசியம் தேவை. அவரால் மிகப்பெரிய இன்னிங்ஸை ஆங்கர் ரோல் செய்து ஆட முடியும். இந்த வாய்ப்பினை அவருக்கு வழங்கினால் அவர் இங்கிலாந்து மண்ணில் சாதித்து காட்டுவார் என பிராட் ஹாக் கூறியது குறிப்பிடத்தக்கது.



