கடந்த 10 வருடத்தில் இதுமாதிரி நடந்ததே இல்ல – வேதனையுடன் விவரிக்கும் விராட் கோலி

kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் ஆகஸ்ட் 27ஆம் தேதியான இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 2022 தொடர் துவங்கியுள்ளது. இந்த தொடரின் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக 3 வகையான இந்திய அணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஏராளமான ரன்களையும் 70 சதங்களையும் விளாசி நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ள அவர் கடந்த 2019க்குப்பின் சுமார் 3 வருடங்களாக 71வது சதத்தை அடிக்க முடியாமல் தவிக்கிறார்.

அதனால் நிறைய முன்னாள் வீரர்கள் பெரிய பெயரை வைத்துக் கொண்டு பெரிய ரன்களை எடுக்காமல் எவ்வளவு நாட்கள் விளையாட முடியும் என்ற வகையில் அணியிலிருந்து நீக்குமாறு விமர்சித்துள்ளார்கள். அதிலிருந்து விடுபடுவதற்காக 2017 முதல் இந்தியா மற்றும் ஐபிஎல் தொடரில் வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்புகள் அழுத்ததை கொடுத்ததாக உணர்ந்த அவர் அதை படிப்படியாக ராஜினாமா செய்து சுதந்திரமாக விளையாடத் தொடங்கியதால் விரைவில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

படுத்தும் பணிச்சுமை:
ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட எதிர்பார்க்கப்பட்டதை விட சுமாராக செயல்பட்ட அவரது உடலிலும் முகத்திலும் ஆட்டத்திலும் ஓடிஓடி ரன்கள் சேர்த்த களைப்பு தெரிந்ததால் சில மாதங்கள் ஓய்வெடுக்குமாறு ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். குறிப்பாக கிரிக்கெட்டை முற்றிலுமாக விட்டு விட்டு சிலமாதங்கள் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலா மேற்கொண்டு மனதளவில் புத்துணர்ச்சியடைவதே நீங்கள் பார்முக்கு திரும்ப ஒரே வழி என இங்கிலாந்தின் மைக்கேல் வாகன் ஆலோசனை தெரிவித்தார்.

இருப்பினும் தொடர்ச்சியாக விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்று பதிலளித்த விராட் கோலி சொன்னது போல் விளையாடாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மட்டும் பங்கேற்று விட்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்தார். ஆனால் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக பார்முக்கு திரும்ப அந்த தொடர்களில் அவர் விளையாடியிருக்க வேண்டும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் அதற்கும் விமர்சித்தனர்.

- Advertisement -

முதல் முறையாக:
இருப்பினும் எதற்கும் செவி சாய்க்காமல் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வெடுத்த அவர் நல்ல புத்துணர்ச்சியுடன் இந்த ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தயாராகி வருகிறார். இந்நிலையில் சமீபத்திய ஓய்வின்போது கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக பேட்டை கையில் தொடாமல் இருந்ததாக தெரிவிக்கும் விராட் கோலி மனதளவில் தாம் பாதிக்கப்பட்டதை ஒப்புக்கொள்வதாக வேதனையுடன் கூறினார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“கடந்த 10 வருடங்களில் முதல் முறையாக நான் ஒரு மாதம் பேட்டை தொடவில்லை. சமீப காலங்களாக நான் எனது தீவிரமான ஆட்டத்தை கொஞ்சம் போலியாக செய்ய முயற்சிப்பதாக உணர்ந்தேன். கிரிக்கெட் வீரரான உங்களிடம் தீவிரமான ஆர்வத்துடன் இருப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் உங்களது உடல் உங்களை நிறுத்த சொல்கிறது. மேலும் ஒரு கால் பின் வைத்து ஓய்வெடுக்க சொல்கிறது”

- Advertisement -

“இந்த மோசமனா காலம் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தது. இதில் மேல் நோக்கி வர அனுமதிக்காத பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நான் மனதளவில் கஷ்டப்படுகிறேன் என்பதை ஏற்றுக்கொள்ள வெட்கப்படவில்லை. இருப்பினும் அந்த உணர்வு வருவது சாதாரண விஷயம் என்ற நிலைமையில் அதை வெளியில் சொல்ல தயங்குவதால் பேசுவதில்லை. மேலும் மன ரீதியாக ஒருவர் பலவீனமானவரா என்று யாரும் பார்க்க விரும்பவில்லை. பலவீனமாக இருப்பதை ஒப்புக் கொள்வதை விட வலிமையானவர் என்று போலியாக இருப்பது மோசமானது என்று கூறும் என்னை நம்புங்கள்”

“நிறைய பேர் என்னிடம் இதை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்களிடம் இந்த விளையாட்டை விரும்பி விளையாடி களத்தில் ஒவ்வொரு அங்குலத்திலும் எனது பங்களிப்பை கொடுக்க விரும்புவதே காரணம் என்று கூறுவேன். நான் எப்போதும் அசாதாரணமாக உணர்வதில்லை என்பதால் அதைப் பற்றி நிறைய பேர் அதை எவ்வாறு தொடர்கிறார்கள் என்று கேட்பார்கள்.

- Advertisement -

அதற்கு எனது அணியை வெற்றிபெற வைக்க எனது முழு மூச்சை கொடுக்க விரும்புகிறேன் என்பதையே கூறுவேன்” என்று தொடர்ச்சியாக விளையாடுவதால் ஏற்பட்ட மன அழுத்தத்தைப் பற்றி கூறினார்.

இதையும் படிங்க : இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து தொடர் நாயகன் விருது வெல்வேன் – பாக் வீரர் நம்பிக்கை

தற்போது ஓரளவு நல்ல புத்துணர்ச்சியுடன் ஆசிய கோப்பையில் களமிறங்கும் அவர் பார்ம் அவுட்டாகவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறினாலும் தாம் உருவாக்கிய தங்கமான தரத்திற்கு ஈடாக சிறப்பாக செயல்பட்டு விமர்சனங்களை அடித்து நொறுக்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement