
இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கும் அந்தத் தொடரில் துருவ் ஜுரேல் சாதாரண பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஏனெனில் கடந்த வாரம் தென்னாபிரிக்கா ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் அவர் 2 சதங்கள் அடித்து அசத்தினார்.
அத்துடன் கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் 2வது போட்டியிலும் சதத்தை பிடித்த அவர் ரிசப் பண்ட் காயமடையும் போதெல்லாம் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் ஜுரேலை விளையாட வைக்க இந்திய அணியில் விரும்புகிறது. ஆனால் யாருக்கு பதிலாக அவரை விளையாட வைப்பது என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது.
ஏனெனில் கடந்த இங்கிலாந்து தொடரில் காயமடைந்த ரிஷப் பண்ட் குணமடைந்து மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். அது போன்ற சூழ்நிலையில் 3வது இடத்தில் தடுமாறி வரும் சாய் சுதர்சனுக்கு பதிலாக ஜுரேலை விளையாட வைக்கலாம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் நித்திஷ் ரெட்டிக்கு பதிலாக ஜுரேல் 6வது இடத்தில் விளையாடுவார் என்று துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வாரம் ரிஷப் பண்ட், ஜுரேல் ஆகியோர் விளையாடுவதை பார்க்காவிட்டால் நான் ஆச்சரியப்படுவேன். கடந்த 6 மாதங்களாக அசத்தி வரும் ஜுரேல் சென்ற வாரம் பெங்களூருவில் 2 சதங்கள் அடித்தார். எனவே இந்த வாரம் அவர் விளையாடுவது உறுதி. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடிய நித்திஷை வருங்காலத்தை முன்னிட்டு வளர்ப்பது முக்கியம்”
“எனவே நாங்கள் அவரை கற்றுக் கொள்வதற்காக விளையாடும் ஒரு சாத்தியமான வீரராக பார்க்கிறோம். அதே சமயம் நீங்கள் உங்கள் உத்தியை பின்பற்றி விளையாடுவதும் முக்கியம். விளையாட்டை வெல்வதற்கான உத்தியை வகுப்பதே முதன்மையானது. வீரர்களின் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்க முடிந்தால் அதை நிச்சயம் செய்வோம்”
இதையும் படிங்க: சஞ்சு சாம்சன் வெளியேறும் பட்சத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் புதிய கேப்டன் யார்? – வெளியான தகவல்
“அதன் அடிப்படையில் நித்திஷ் ரெட்டிக்கு நாங்கள் வழங்கும் வாய்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தென் ஆப்பிரிக்கா தொடரின் முக்கியத்துவம் மற்றும் சூழ்நிலைகளைக் கருதி நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில் இந்த வாரம் நித்திஷ் விளையாட மாட்டார்” என்று கூறினார். இதிலிருந்து ஜுரேல், பண்ட் ஆகிய இருவருமே விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.