இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முடிந்த மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் பும்ரா பந்து வீசுகையில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் தனது இடது கை விரலில் காயமடைந்தார். இதன் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் கீப்பிங் செய்ய வரவில்லை. அதன் காரணமாக அவருக்கு பதிலாக துருவ ஜுரேல் தான் பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.
4 ஆவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு பதிலாக துருவ் ஜுரேல் :
ஆனாலும் கையில் ஏற்பட்ட அந்த காயத்துடன் இரண்டு இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக பேட்டிங் செய்திருந்தார். இந்நிலையில் ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடையவில்லை எனில் நான்காவது போட்டியில் அவரை விளையாட வைக்கக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரராக இருப்பதனால் அவரை விளையாட வைக்க வேண்டும் என்றும் ஒருபுறம் சிலர் பேசிவருகின்றனர்.
அதேவேளையில் மான்செஸ்டர் போட்டிக்கு முன் பண்ட் முழுஉடற்தகுதியினை எட்டவில்லை என்றால் நான்காவது போட்டியில் அவர் இடம்பெற மாட்டார் என்று இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் தான் விளையாடுவார் என்பது ஒரு வீடியோவின் மூலம் தற்போது மறைமுகமாக தெரியவந்துள்ளது.
ஏனெனில் மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் பயிற்சியில் ரிஷப் பண்ட் பங்கேற்காத வேளையில் மாற்று விக்கெட் கீப்பரான துருவ் ஜுரேல் பீல்டிங் பயிற்சியாளருடன் இணைந்து தீவிரமாக கீப்பிங் பயிற்சியை மேற்கொண்டு இருந்தார். இதை பார்க்கையில் நிச்சயம் ரிஷப் பண்ட்டுக்கு நான்காவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : இடம்மாறப்போகும் வெங்கடேஷ் ஐயர் மற்றும் இஷான் கிஷன்.. அடுத்த ஐ.பி.எல் தொடருக்கு முன்னதாக – ஏற்படவுள்ள மாற்றம்
ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான துருவ் ஜுரேல் கீப்பிங்கில் அசத்தலாக செயல்பட்டதோடு மட்டுமின்றி பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவர் நான்காவது போட்டியில் விளையாடினாலும் அது இந்திய அணிக்கு சாதகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.



