2வது போட்டியிலேயே இந்தியாவை காப்பாற்றிய துருவ் ஜுரேல்.. 22 வருடத்துக்குப் பின் அபார சாதனை

Dhruv Jurel 6
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் வென்றுள்ளது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் கூட தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இந்தியா தக்க வைத்துள்ளது.

அத்துடன் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து 17வது முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ள இந்தியா அவ்வளவு எளிதாக எங்களை வீழ்த்த முடியாது என்பதை இங்கிலாந்துக்கு காண்பித்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினர்.

- Advertisement -

22 வருடங்களுக்குப் பின்:
அதே போல கேஎஸ் பரத்துக்கு பதிலாக 3வது போட்டியில் அறிமுகமான துருவ் ஜூரேல் 46 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். அதை விட ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் கேப்டன் ரோஹித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 177/7 என தடுமாறியது.

அப்போது 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவை குல்தீப் யாதவுடன் சேர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த துருவ் ஜூரேல் 90 ரன்கள் அடித்து காப்பாற்றினார். அதனால் 307 ரன்கள் எடுத்து ஓரளவு தப்பிய இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 145 ரன்களுக்கு சுருட்டியது. இறுதியில் 192 ரன்களை துரத்தும் போது ரோஹித், ஜெய்ஸ்வால் ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுத்தும் படிடார், ஜடேஜா, சர்பராஸ் கான் சொற்ப ரன்களில் அவுட்டானதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

ஆனால் அப்போது கில்லுடன் சேர்ந்து மீண்டும் சிறப்பாக விளையாடிய அவர் 39* ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதன் காரணமாக ஆட்டநாயகன் விருதையும் வென்ற துருவ் ஜூரேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 22 வருடங்கள் கழித்து அறிமுகமான முதல் தொடரிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஈஸியா கிடைக்கல.. கோலி, பண்ட் இல்லாமையே நாங்க ஜெயிக்க காரணம் இது தான்.. ரோஹித் பெருமிதம்

கடைசியாக கடந்த 2002ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடந்த தொடரில் விக்கெட் கீப்பராக அறிமுகமான அஜய் ரத்ரா ஆன்டிகுவாவில் நடந்த நான்காவது போட்டியில் 115 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அவருக்குப் பின் தற்போது தனது முதல் தொடரின் இரண்டாவது போட்டியிலேயே ஜுரேல் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதற்கு முன் தோனி, பண்ட் போன்றவர்கள் கூட தங்களுடைய அறிமுக டெஸ்ட் தொடரில் ஆட்டநாயகன் விருது வென்றதில்லை.

Advertisement