ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்களும், அறிமுக வீரர் ஜெகதீசன் 33 ரன்களையும் அடித்தனர்.
இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கிரிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வானார்.
இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறுகையில் : பேட்டிங் வரிசையில் எங்களுக்கு போதிய பலம் இல்லை. முதல் நான்கு வீரர்கலில் ஹிட்டர்கள் யாரும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தொடக்கத்திலிருந்து சிறப்பாக பந்துவீசி நெருக்கடியை உண்டாக்கினோம். ஆனால் கடைசி 4 ஓவர்களில் பவுலர்கள் தடுமாற்றத்தை அடைந்தனர். அதனை சாதகமாக பயன்படுத்திய பெங்களூர் அணி எங்களை அழுத்தத்திற்கு உண்டாக்கியது.
பேட்டிங்கை பொறுத்தவரையில் இன்னும் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எங்களுடைய கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அதனை சரிசெய்து விரைவில் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து பேட்டிங்கில் செயல்பட வேண்டும். எதிரணியில் மிடில் ஓவர்களில் யார் பந்துவீச போகிறார்கள் என்று சரியாக திட்டம் வகுக்காமல் பேட்டிங் செய்தோம் அதுவும் ஒரு பலவீனமாக அமைந்தது.
தோல்விகளை திரும்பிப் பார்க்க வேண்டாம் என்று நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவேன். ஏனென்றால் கடந்த தோல்வியை நினைத்தால் இந்த போட்டியின் மீது அழுத்தம் உண்டாகும். எனவே எதிர்வரும் போட்டிகளில் இந்த தடுமாற்றங்களை கலந்து மீண்டும் நாங்கள் எங்களை தயார் செய்து திரும்புவோம் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.