ரொம்ப நல்லா ஆடுறாரு. இவரிடம் உண்மையில் ஸ்பார்க் இருக்கிறது – ஒருவழியாக ஒப்புக்கொண்ட தோனி

Dhoni

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட் செய்வதாக தீர்மானித்தார்.

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்தது அதிகபட்சமாக விராட் கோலி 50 ரன்களும், டிவில்லியர்ஸ் 39 ரன்களையும் குவித்தனர். சென்னை அணி சார்பாக சாம் கரன் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய ருதுராஜ் 51 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் தோனியும் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ஒரு ஆறுதலான வெற்றியை அடைந்துள்ளது.

csk

இந்நிலையில் போட்டி முடிந்து ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டம் பற்றி பேசிய தோனி கூறுகையில் : இந்த தொடரில் இரண்டாவது மூன்றாவது போட்டியிலேயே அவரின் ஆட்டத்தை நாங்கள் கவனித்தோம். இருப்பினும் அவருக்கு இந்த ஆண்டு கடினமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் சென்னையில் பயிற்சியின்போது சிறப்பாக பேட்டிங் செய்தார். அதன்பிறகு கோவிட் காரணமாக அவருக்கு அதிகப்படியான தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அதிகரித்தன.

- Advertisement -

அதனால் அவருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை அது இன்னும் அவருக்கு தூரத்தில் எடுத்துச் சென்றது. கடைசியாக நடைபெற்ற போட்டியில் கூட விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இதுபோன்று நடைபெறுவது சாதாரண ஒன்றுதான்.

gaikwad 1

ஆனால் இன்றைய போட்டியில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். மைதானத்தின் தன்மை, போட்டியின் சூழ்நிலை, அவரது தனிப்பட்ட மனநிலை என அனைத்தையும் கையாண்டு அவர் சிறப்பாகவே விளையாடினார் என்று கூறுவேன். மேலும் முதல் சிங்கிள் எடுத்தவுடன் அவருக்கு நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு அவர் முதல் பவுண்டரி அடித்து இன்னும் எளிதாக விளையாடினார் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.