ஐபிஎல் தொடரின் 25 ஆவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 52 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 90 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அதன்பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே அடித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 42 ரன்களும், அறிமுக வீரர் ஜெகதீசன் 33 ரன்களையும் அடித்தனர்.
இதனால் பெங்களூர் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி பெற்ற இந்த தோல்வியின் மூலம் பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மங்கி உள்ளது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சார்பாக கிரிஸ் மோரிஸ் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 19 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் மூன்று ஓவர்கள் வீசி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வானார்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி பௌலிங்கில் உள்ள குறைபாடுகளை பற்றியும் பேசினார். இது குறித்து அவர் கூறுகையில் : நான் எப்பொழுதுமே வீரர்களிடம் போட்டியில் கவனமாக இருங்கள் என்று கூறிக் கொண்டே இருப்பேன். ஏனெனில் கடந்த போட்டிகளில் அடைந்த தோல்விகளை நாம் பார்த்து களமிறங்கினால் அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முடியாது. மேலும் வீரர்களுக்கு அழுத்தமும் அதிகரிக்கும். எனவே கடந்த போட்டியில் ஏற்பட்ட முடிவுகளைப் பற்றி யோசிக்க வேண்டாம் என்று கூறுவேன்.
அதுமட்டுமின்றி தற்போது எங்களுடைய பௌலிங் சில குறைபாடுகள் உள்ளது. நாங்கள் எதிர் அணியை கட்டுப்படுத்தி சிறப்பாக பந்து வீசினாலும் முதல் 6 ஓவர் அல்லது இறுதி நான்கு ஓவர் இந்த இரண்டு பகுதிகளில் அதிகம் ரன்களை விட்டுக் கொடுக்கிறோம். இந்த காரணங்களே ரன்கள் எதிரணிக்கு அதிகமாக கிடைக்க வாய்ப்பாக அமைகிறது. இதனை சரிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். ஒருமுறை எங்கள் அணிக்கு சாதகமாக முடிவு கிடைத்தால் அது நிச்சயம் எங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.