
மும்பை வான்கடே மைதானத்தில் நாளை மறுதினம் துவங்க உள்ள 15-வது ஐபிஎல் தொடரானது ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் நாளை மறுதினம் முதல் லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே அனைத்து அணிகளும் தங்களது அணியின் கேப்டன், வீரர்கள், சீருடை என அனைத்தையும் வெளியிட்டிருந்தது.
அதன்படி சென்னை அணியும் நேற்று இந்த சீசனுக்கான சி.எஸ்.கே அணியின் ஜெர்சியை வெளியிட்டிருந்தது. மேலும் சிஎஸ்கே அணி கோப்பையை தக்கவைக்கும் முனைப்புடன் தங்களது அணியை தயார்படுத்தி வந்தது. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே சிஎஸ்கே அணியின் கேப்டனாக திகழ்ந்து வந்த மகேந்திர சிங் தோனி இன்று திடீரென அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவருக்கு பதிலாக சி.எஸ்.கே அணியின் புதிய கேப்டனாக முன்னணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தேர்வு நியமிக்கப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சிஎஸ்கே அணியின் நிர்வாகம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி வருகிறது.
மேலும் தோனியின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சிஎஸ்கே அணி இன்று இந்தியா முழுவதும் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்கும், நான்கு முறை சாம்பியனாக திகழ்வதற்கும் முக்கிய காரணமாக தோனியின் கேப்டன்சி பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திடீரென தோனி இன்று கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியது அனைவருக்கும் வருத்தமளிக்கும் விடயமாக மாறியுள்ளது.
இருப்பினும் சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு தோனி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது. ஆனால் அவர் ஏன் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறித்த எந்த காரணமும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க : என்னது மும்பையில் போட்டிகள் நடப்பது எங்களுக்கு சாதகமா? – ரோஹித் கொடுத்த வித்தியாசமான விளக்கம்
இந்த 15 ஆவது ஐ.பி.எல் தொடருக்கான முதல் லீக் போட்டியில் நாளை மறுதினம் சென்னை அணியானது ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் இருந்தே ஜடேஜா கேப்டனாக செயல்படுவார் என்றும் தோனி அணியில் தொடர்ந்து ஒரு வீரராக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.