ஆஸ்திரேலியாவில் இன்னும் சில தினங்களில் டி20 உலக கோப்பை தொடரானது துவங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்பதனால் இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் இந்திய அணிக்கு பலரும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது இந்திய அணி எதிர்வரும் டி20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான சக்சஸ் ரகசியம் குறித்து பேசி உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற தோனி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கு சில விடயங்கள் நடந்தாலே போதும் என்றும் தனது அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி தோனி கூறுகையில் :

இந்த டி20 உலக கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியின் போதும் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது திறனை 80 முதல் 90 சதவீதம் வரை வெளிப்படுத்த வேண்டும். அதேபோன்று எதிரணியின் பவர் ஹிட்டர்கள் மற்றும் பவுலர்கள் ஆகியோருக்கு அந்த நாள் மோசமான நாளாக அமைய வேண்டும்.
இப்படி இரண்டும் நடந்தால் இந்திய அணியின் வெற்றி உறுதி. அதே வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் வீரர்கள் எங்கும் மனம் தளராமல் எந்த நேரத்திலும் போராடும் மனநிலையை பெற்று இருக்க வேண்டும் என்றும் தோனி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : மும்பை ஏர்போர்ட்டில் பிரச்சனையால் சிக்கி தவித்த ஷர்துல் தாகூர். உதவிய ஹர்பஜன் – வைரலாகும் பதிவு
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கும் இந்த டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணி தங்களது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.



