ஐபிஎல் தொடரின் 34 ஆவது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக டூபிளெஸ்ஸிஸ் 58 ரன்களும், ராயுடு 45 ரன்களும் குவித்தனர். அதன்பிறகு 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
58 பந்துகளைச் சந்தித்த ஷிகார் தவான் 101 ரன்களுடனும், 5 பந்துகளை சந்தித்த அக்சர் பட்டேல் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகார் தவான் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி சுழற்பந்து பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை அழைத்தது அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஏனெனில் இடது கை ஆட்டக்காரர்கள் 2 பேர் கிரீசில் இருக்க இடது கை ஸ்பின்னரை அனுப்பினால் எளிதாக அடித்து விடுவார்கள். அந்த வகையில் அக்ஷர் பட்டேல் 3 சிக்சர்களை பறக்கவிட்டு ஜடேஜாவை பிரித்தெடுத்து வெற்றி ரன்களை அடித்து அசத்தினார்.
இந்நிலையில் அந்த இருபதாவது ஓவரை ஏன் ஜடேஜா வீசினார் என்பது குறித்து போட்டி முடிந்து டோனி பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இருபதாவது ஓவரை ஜடேஜா வீசுவதற்கு காரணம் யாதெனில் : பிராவோ உடல் தகுதியுடன் இல்லை அவர் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.
ஆனால் மீண்டும் களத்திற்குள் வரவே இல்லை. அதன் காரணமாகவே ஜடேஜாவுக்கு கடைசி ஓவரை வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஜடேஜா, கரண் சர்மா ஆகிய இருவர் மட்டுமே இருந்தனர் அதனால் நான் ஜடேஜாவை முன்னிறுத்தி பந்துவீச அனுமதித்தேன் என்று தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.