எங்க காலத்துல சச்சின், தோனி காயமடையல, இப்போ பும்ரா போன்றவர்கள் காயமடைய விராட் ஸ்டைலே காரணம் – சேவாக்

Virender Sehwag
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகையால் இப்போதெல்லாம் வருடம் முழுவதிலும் உலகம் முழுவதிலும் அனைத்து நாட்களிலும் ஏதோ ஒரு வகையான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. ஆனால் அதன் காரணமாக பல வகைகளிலும் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது நாட்டுக்காக விளையாடும் வீரர்கள் பின்னடைவை சந்திக்கிறார்கள் அல்லது நாட்டுப் பற்றுடன் விளையாடுவதில்லை. அது போக அதிகப்படியான போட்டிகளில் விளையாடுவதால் இப்போதெல்லாம் நிறைய வீரர்கள் காயத்தை சந்திப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.

குறிப்பாக இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா கடந்த வருடம் காயமடைந்து குணமடைந்து மீண்டும் காயமடைந்து வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை கொடுத்தது. அடுத்ததாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படும் அவரைப் போலவே கடந்த வருடம் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹர் போன்ற முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறியது பெரிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

விராட் கோலி ஸ்டைல்:
அதை விட இந்த வீரர்களது காயங்களை நன்கு உற்றுப் பார்த்தால் அதில் பாதிக்கும் மேற்பட்ட காயங்கள் மைதானத்திற்கு வெளியே வலைப்பயிற்சி செய்யும் போது அல்லது பயிற்சி கூடங்களில் பயிற்சி எடுக்கும் போது ஏற்பட்டதாகும். இந்நிலையில் தங்களது காலத்தில் சச்சின், தோனி, யுவராஜ் சிங் உள்ளிட்ட யாரும் தசைப்பிடிப்பு போன்ற காயங்களை சந்தித்ததில்லை என்று தெரிவிக்கும் வீரேந்திர சேவாக் தற்போதைய வீரர்கள் காயமடைவதற்கு பயிற்சி கூடங்களில் அதிகப்படியான எடை கொண்ட பளுவை தூக்குவதே காரணமென்று விளாசியுள்ளார்.

குறிப்பாக ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி கடைப்பிடிக்கும் கடினமான உடல் பயிற்சிகளை இதர வீரர்களும் பின்பற்ற நினைப்பதை இதற்கு காரணம் என்றும் சேவாக் கூறியுள்ளார். அதாவது அனைவராலும் விராட் கோலியாக முடியாது என்று தெரிவிக்கும் அவர் அவரவர் தங்களது உடலுக்கேற்ற பயிற்சிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அந்த கடினமான பயிற்சிகளை செய்து அஸ்வின் – அக்சர் பட்டேல் ஆகியோர் காயமடைந்ததை எடுத்துக்காட்டாக கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கிரிக்கெட்டில் பளு தூக்குவதற்கு எந்த வேலையும் இல்லை. மாறாக உங்கள் விளையாட்டில் முன்னேறுவதற்கு தேவையான உடற்பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். பளு தூக்குவது உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். ஆனால் அதுவே உங்களிடம் விறைப்பு மற்றும் வலியை அதிகரிக்கும். எங்களுடைய காலத்தில் ஆகாஷ் சோப்ரா, கௌதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, டிவிஎஸ் லக்ஷ்மன், எம்எஸ் தோனி அல்லது யுவராஜ் சிங் போன்ற யாருமே தொடை எலும்பு அல்லது நாற்கர காயங்களை சந்தித்து வெளியேறவில்லை”

“முன்னாள் பயிற்சியாளர் பாபு சங்கர் இந்திய அணியுடன் நீண்ட நாட்கள் இணைந்து பணியாற்றினார். அவர் எப்போதும் அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சிகளை கடை பிடித்தார். ஆனால் அவர் ஏன் அஸ்வின் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான பயிற்சிகளை கடைபிடிக்க வேண்டும்? ஒரு முறை ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் நான் இருந்த போது பளு தூக்கும் பயிற்சிகள் ட்ரெண்டிங்கில் இருப்பதால் அதை செய்வதாக அஸ்வின் என்னிடம் தெரிவித்தார். ஆனால் விளையாட்டு வீரர்கள் இளம் வயதிலிருந்தே இந்த பயிற்சிகளை செய்தும் காயமடைகிறார்கள். அப்படியிருக்க ஒரு கிரிக்கெட் வீரர் அதை 30 வயதில் துவங்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்”

இதையும் படிங்க: அவரு மறுபடியும் பார்முக்கு வந்துட்டாரு. இனி அந்த இந்திய வீரரை நிப்பாட்டுறது கஷ்டம் – பால் காலிங்வுட் புகழாரம்

“அந்த கடினமான பயிற்சிகளை எடுத்ததன் காரணமாகவே அஸ்வின் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தங்களுடைய முழங்காலில் பிரச்சனைகளை சந்தித்தனர். எங்களுடைய காலங்களில் நாங்கள் பளு தூக்கும் பயிற்சிகளை எடுக்காமலேயே தொடர்ந்து கிரிக்கெட்டில் வெற்றிகரமாக விளையாடினோம். இது விராட் கோலியின் அடிப்படை பயிற்சிகளாகும். ஆனால் இங்கே அனைவரும் விராட் கோலி கிடையாது. அதனால் காயங்களை தவிர்க்க உங்களது உடலுக்கேற்றார் போன்ற பயிற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement