ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் 4 போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் தோற்கடித்த இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. நேற்று துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியா 202/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 61, திலக் வர்மா 49*, சஞ்சு சாம்சன் 39, அக்சர் பட்டேல் 21* ரன்கள் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய இலங்கை முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 202/5 ரன்கள் மட்டுமே எடுத்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. அதிகபட்சமாக நிசாங்கா சதமடித்த 107, குசால் பெரேரா 58, சனாக்கா 22* ரன்கள் எடுத்தனர். இறுதியாக வெற்றியாளரை நிர்ணயிக்க நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக இலங்கை 2/2 ரன்களை மட்டுமே எடுத்தது.
ரன் அவுட் விதிமுறை:
பின்னர் இலங்கையின் ஹசரங்கா சூப்பர் ஓவரின் முதல் பந்திலேயே 3 ரன்கள் அடித்த கேப்டன் சூரியகுமார் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் நேற்றைய போட்டி 2025 ஆசியக் கோப்பையில் இதுவரை நடந்தப் போட்டிகளைக் காட்டிலும் ரசிகர்களுக்கு உச்சகட்ட திரில்லர் விருந்து படைத்தது என்றே சொல்லலாம். முன்னதாக அப்போட்டியில் அர்ஷ்தீப் வீசிய சூப்பர் ஓவரின் 4வது பந்தை இலங்கையின் சனாக்கா எதிர்கொண்டார்.
அந்தப் பந்து அவருடைய பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கைகளில் கிடைத்ததாக நினைத்த அர்ஷ்தீப் சிங் அவுட் கேட்டார். அதற்கு களத்தில் இருந்த நடுவரும் விக்கெட் வழங்கினார். அதற்கிடையே சிங்கிள் எடுக்க ஓடிய சனாக்காவை சாம்சன் ஸ்டம்ப் மேலே பந்தை குறிப் பார்த்து எறிந்து ரன் அவுட்டாக்கினார்.
குழம்பிய ரசிகர்கள்:
மறுபுறம் பந்து தம்முடைய பேட்டில் படவில்லை என்று கருதிய சனாக்கா ரிவியூ எடுத்தார். அதை சோதித்த போது பந்து அவருடைய பேட்டில் படவில்லை என்பது தெளிவாக தெரிந்ததால் 3வது நடுவர் நாட் அவுட் வழங்கினார். அதைப் பார்த்த இந்திய வீரர்கள் சனாகாவுக்கு எதிராக ரன் அவுட் வழங்குமாறு கேட்டனர். இருப்பினும் நடுவர் ரன் அவுட் வழங்காததால் இந்திய வீரர்களும் ரசிகர்களும் குழம்பினார்கள்.
இதையும் படிங்க: பரபரப்பான போட்டியின் முடிவில் இலங்கை வீரரிடம்.. சூரியகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல்.. விவரம் இதோ
ஏனெனில் ஒய்ட், நோ-பால் போன்ற பந்துகளில் கூட ரன் அவுட்டானால் பேட்ஸ்மேன் அவுட்டாகி வெளியே செல்ல வேண்டும் என்பது விதிமுறையாகும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெறும் சூழ்நிலைகளில் நடுவர் வழங்கும் முதல் தீர்ப்பே இறுதியானதாகும். அதன் அடிப்படையில் நடுவர் முதலில் சனாக்கா கேட்ச் முறையில் அவுட் என்று தீர்ப்பு வழங்கியதால் விதிமுறைப்படி அப்பந்து காலாவதியாகி விட்டது (டெட் பால்). அதனாலேயே ரன் அவுட்டிலிருந்து தப்பிய சனாகா தொடர்ந்து விளையாடினார். ஒருவேளை அர்ஷ்தீப் அவுட் கேட்காமல் இருந்திருந்தால் ரன் அவுட் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



