எப்பா 18 வயசுலயே மெகா சிக்ஸர் அடித்து சாதனை படைத்த குட்டி ஏபிடி, தனி ஒருவனாக மிரட்டல் – வீடியோ இதோ

Dewald Brevis 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் மும்பை வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் திரில் வெற்றி பெற்று பங்கேற்ற 5 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 198/5 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த தொடக்க ஜோடி மயங்க் அகர்வால் 52 (32) ரன்களும் ஷிகர் தவான் அதிரடியாக 70 (50) ரன்களும் குவித்தனர். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பேசில் தம்பி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

திண்டாடும் மும்பை:
அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 186/9 ரன்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வி அடைந்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக 28 (17) ரன்கள் எடுக்க இஷான் கிசான் வெறும் 3 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதனால் 32/2 என சரிந்த மும்பையை அடுத்து களமிறங்கிய இளம் வீரர்கள் தேவால்டு ப்ரேவிஸ் 49 (25) ரன்களும் திலக் வர்மா 36 (20) ரன்களும் அதிரடியாக எடுத்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றினாலும் முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள்.

அந்த நிலையில் அடுத்து களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் 10 (11) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க கடைசி நேரத்தில் சூரியகுமார் யாதவ் 30 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் மும்பை பரிதாபமாக தோற்றது. இதானல் இந்த வருடம் ஏற்கனவே பங்கேற்ற தனது முதல் 4 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய மும்பை இந்த போட்டியிலாவது வென்று வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்த்த அந்த அணி ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

- Advertisement -

5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சரித்திர சாதனை படைத்துள்ள மும்பை தற்போதைய நிலைமையில் பங்கேற்ற 5 போட்டிகளிலும் 5 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடி வருகிறது. இருப்பினும் கடந்த 2014-ஆம் ஆண்டு இதேபோல முதல் 5 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்த அந்த அணி அதன்பின் மீண்டெழுந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எனவே அதே போல் மீண்டும் ஒரு மேஜிக்கை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை நிகழ்த்தும் என அந்த அணி ரசிகர்கள் இன்னும் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர்.

மாஸ் காட்டிய தேவாலட் ப்ரேவிஸ்:
முன்னதாக இந்த போட்டியில் 32/2 என்ற நிலைமையில் தடுமாறிய மும்பைக்கு அடுத்ததாக களமிறங்கிய 18 வயது மட்டுமே நிரம்பிய இளம் தென்ஆப்பிரிக்கா வீரர் தேவால்டு ப்ரேவிஸ் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து சரிந்த மும்பையை தூக்கி நிறுத்த போராடினார். களமிறங்கிய முதல் ஓவரிலிருந்தே அதிரடியை கையாண்ட இவர் இளம் இந்திய வீரர் ராகுல் சஹர் வீசிய 9-வது ஓவரில் பட்டாசாக வெடிக்கும் வகையில் 2-வது பந்தில் பவுண்டரியை பறக்க விட்டு எஞ்சிய 4 பந்துகளில் 4 அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை பறக்கவிட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

- Advertisement -

அந்த ஒரே ஓவரில் 28 ரன்களை நொறுக்கிய அவர் மொத்தம் 25 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 49 ரன்கள் விளாசி அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் ராகுல் சஹர் ஓவரில் அடித்த 4 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸரை 112 மீட்டர் மெகா தூரத்திற்கு பறக்க விட்ட அவர் ஐபிஎல் 2022 தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் மிகப்பெரிய சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இங்கிலாந்து வீரர் லியம் லிவிங்ஸ்டன் 108 மீட்டர் சிக்ஸரை அடித்தது 2-வது இடத்தில் உள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிரடியாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்ற அவர் முன்னாள் தென்ஆப்பிரிக்க ஜாம்பவான் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவிலியர்ஸ் போலவே அதிரடியாக விளையாடுவதால் பேபி ஏபி, குட்டி ஏபிடி போன்ற பெயர்களில் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க : மும்பை அணியை பார்த்தாலே புரட்டி எடுக்கும் நட்சத்திர வீரர் – ரெய்னாவை முந்திய புதிய சூப்பர் சாதனை

தற்போது வெறும் 18 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இப்போதே இந்த போடு போடுகிறார் என்றால் வரும் காலங்களில் சக்கை போடு போடுவார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement