அடுத்த ஏபிடி வந்தாச்சு! பிரமிக்கவைத்த இளம்வீரர். RCB க்கு விளையாட அழைக்கும் ரசிகர்கள் – யார் அவர்?

Brevis
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் நாட்டில் நடைபெற்றுவரும் ஐசிசி அண்டர்-19 உலக கோப்பை 2022 தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 14 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில் அதில் தகுதி பெற்ற அணிகள் காலிறுதி போட்டியில் மோதி வருகின்றன. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்க அண்டர் 19 அணி பங்கேற்ற 3 லீக் போட்டிகளில் 2 வெற்றிகளையும் 1 தோல்வியையும் பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இருப்பினும் காலிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்த அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெறும் கையுடன் வெளியேறியது.

Dewald-Brevis-1

- Advertisement -

கலக்கும் தேவால்ட் ப்ரேவிஸ்:
இந்த தொடரில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்த போதிலும் சர்வதேச கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்காக கலக்க போகும் ஒரு இளம் ஹீரோவை அந்த அணி கண்டுபிடித்து உள்ளது என்றே கூறலாம். ஆம் அந்த அணிக்காக டாப் ஆர்டரில் விளையாடி வரும் இளம் வீரர் “தேவால்ட் ப்ரேவிஸ்” ஒவ்வொரு போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா தடுமாறிய வேளையில் தனி ஒருவனாக பேட்டிங் செய்து ரன்களை குவித்துள்ளார்.

இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் இந்தியாவுக்கு 65 (99), உகாண்டாவுக்கு எதிராக 104 (110), அயர்லாந்துக்கு எதிராக 96 (122) என ஒவ்வொரு போட்டியிலும் அசத்திய அவர் இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான காலிறுதி போட்டியில் வெறும் 88 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய போதிலும் தென் ஆப்பிரிக்காஅரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது.

brevis 1

அடுத்த ஏபிடி வில்லியர்ஸ் :
இந்த உலக கோப்பையில் அவர் பங்கேற்ற 4 போட்டிகளில் 3 அரைசதங்கள் மற்றும் 1 சதம் உட்பட 362 ரன்களை 86.36 என்ற மிக மிகச் சிறப்பான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் குவித்து உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் தென்ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் “ஏபி டிவில்லியர்ஸ்” போல மைதானத்தின் எந்த ஒரு திசையிலும் ரன்களை குவிப்பதில் இவர் வல்லவராக திகழ்கிறார்.

- Advertisement -

இவரின் பேட்டிங்கையும் இவர் குவித்த ரன்களையும் பார்த்த ரசிகர்கள் முன்னாள் வீரர் “ஏபி டிவில்லியர்ஸை பார்ப்பது போலவே” உள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில ரசிகர்கள் இவரை “பேபி ஏபி” என அழைப்பதுடன் கிரிக்கெட்டுக்கு அடுத்த ஏபி டிவில்லியர்ஸ் கிடைச்சாச்சு என வெளிப்படையாகவே சமூக வலைதளங்களில் பேசத்துவங்கி உள்ளனர்.

brevis 3

பெங்களூருக்கு வாங்க :
அத்துடன் பந்து வீசிவதிலும் வல்லவராக இருக்கும் இவர் இந்த உலக கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் எடுத்து ஒரு ஆல்ரவுண்டராக வளர்ந்து வருகிறார். தற்போது வெறும் 18 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிறந்தவர் ஆவார். இவரின் திறமையை பார்த்த தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் தங்கள் நாட்டுக்கு ஒரு நல்ல இளம் வீரர் எதிர்காலத்தில் கிடைத்து விட்டார் என மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

- Advertisement -

தென்ஆப்பிரிக்காவின் ஏபி டிவிலியர்ஸ் இந்தியாவில் பல ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடிய அவருக்கு பெங்களூருவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட ஏபி டிவிலியர்ஸ் ரசிகரான “தேவால்ட் ப்ரேவிஸ்” ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தீவிர ரசிகர் ஆவார்.

இதையும் படிங்க : ஜடேஜாவை வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யாதது ஏன்? – பி.சி.சி.ஐ கொடுத்த அப்டேட்

சமீபத்தில் பெங்களூரு அணி ஜெர்ஸியை அணிந்து தனது தந்தையுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவரை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாட வருமாறு பெங்களூரு ரசிகர்கள் அழைக்கிறார்கள். இவர் ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் தமது பெயரை பதிவிட்டுள்ளார் என்பதால் வரும் சீசனில் இவரை நிச்சயமாக ஏதாவது ஒரு ஐபிஎல் அணி ஏலத்தில் எடுக்கும் என்பது சந்தேகமே இல்லை.

Advertisement