
ஆஸ்திரேலிய மண்ணில் தென்னாப்பிரிக்கா 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்ற நிலையில் 2வது போட்டி டார்வின் நகரில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 2.45 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி 20 ஓவரில் 218/7 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 4வது இடத்தில் களமிறங்கி ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய தேவால்ட் ப்ரேவிஸ் சதத்தை அடித்து 125* (56) ரன்கள் குவித்தார். குறிப்பாக மேக்ஸ்வெல் வீசிய 12வது ஓவரில் 6, 6, 4, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க
விட்டு அவர் 25 பந்துகளில் தனது முதல் அரை சதத்தை அடித்தார்.
தொடர்ந்து மிரட்டலாக விளையாடிய அவர் 41 பந்துகளில் தென்னாப்பிரிக்காவுக்காக 2வது வேகமான சாதனை சதத்தை அடித்தார். 223.21 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அவருடைய ஆட்டத்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 8 இமாலய சிக்சர்கள் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் மற்றும் பென் ட்வார்சுய்ஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் (30), ஹேசல்வுட் (26), ஆடம் ஜாம்பா (26), சீன் அபோட் (22), பென் ட்வார்சுய்ஸ் (21) என ஆஸ்திரேலியாவின் 5 பவுலர்களுக்கு எதிராக ப்ரேவிஸ் தலா 20க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு சர்வதேச டி20 போட்டியில் 5 பவுலர்களுக்கு எதிராக 20+ ரன்கள் அடித்த வீரர் என்ற தனித்துவ உலக சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் அந்த சாதனையை 2024 செஞ்சூரியன் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் ரீசா ஹென்றி முதல் வீரராக படைத்தார்.
அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் (125*) பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை ப்ரேவிஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 124* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.
இதையும் படிங்க: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூரியகுமார் யாதவின் சாதனையை தகர்த்த டிம் டேவிட் – விவரம் இதோ
இது போக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையையும் ப்ரேவிஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு கௌஹாத்தி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட் 123* ரன்கள் அடித்ததே முந்தைய உலக சாதனை. மேலும் தென்னாபிரிக்காவுக்காக இளம் வயதில் சதத்தை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் ப்ரேவிஸ் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.