
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தாங்கள் விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் 5 போட்டிகளில் விளையாடிய சி.எஸ்.கே 1 வெற்றி, 4 தோல்விகளை பெற்ற வேளையில், அதற்கடுத்து தோனி தலைமையில் சி.எஸ்.கே அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை கண்டுள்ளது.
ஏற்கனவே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறிய நிலையில் மற்றொரு வீரராக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த 2025 மெகா ஏலத்தில் 2 கோடி 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்று விளையாடவில்லை.
இவ்வேளையில் காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறிய குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான 21 வயது டேவால்டு பிரேவிஸ் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 75 லட்சம் அடிப்படை விலைக்கு தனது பெயரினை பதிவு செய்த அவரை எந்த அணியும் கண்டுகொள்ளாத வேளையில் தற்போது குர்ஜப்நீத் சிங்கிற்கு மாற்றுவீரராக சென்னை அணி அவரை தேர்வு செய்துள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்காக வெறும் 2 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அவர் ஒட்டுமொத்தமாக 81 டி20 போட்டிகளில் விளையாடி 1787 ரன்களை குவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகளில் அதிகபட்சமாக 162 ரன்களையும் அடித்து அசத்தியுள்ளார்.
கடந்த 2022 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 10 போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தாலும் மிகச் சிறப்பான அதிரடியை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக சென்னை அணியிலும் அவர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம் பெற்று அதிரடி காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : காயம் காரணமாக குஜராத் அணியிலிருந்து வெளியேறிய கிளென் பிலிப்ஸ்க்கு பதிலாக மாற்றுவீரர் அறிவிப்பு – விவரம் இதோ
தென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்று முடிந்த எஸ் ஏ டி20 லீக்கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அந்த தொடரில் அதிக ரன்களை குவித்த ஆறாவது வீரராக இருந்தது மட்டுமின்றி இறுதிப்போட்டியிலும் 18 பந்துகளில் 38 ரன்கள் குவித்து அவரது அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவியிருந்தார். ஏ பி டி வில்லியர்ஸ்ஸின் சிஷ்யனாக பார்க்கப்படும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் “பேபி ஏபிடி” என்ற செல்லப்பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.