சென்னைக்கு புதுசா? முக்கிய ஜாம்பவான் இல்லாமல் தனது ஆல் டைம் சிஎஸ்கே அணியை தேர்ந்தெடுத்த கான்வே – கலாய்க்கும் ரசிகர்கள்

MS Dhoni Devon Conway
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணி என்ற தங்களுடைய பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. கடந்த வருடம் புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்த அந்த அணி இம்முறை தோனி தலைமையில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்டு வலுவான குஜராத்துக்கு எதிராக அதன் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜாவின் அபார ஃபினிஷிங் காரணமாக திரில் வெற்றி பெற்றது மறக்க முடியாததாக அமைந்தது.

மேலும் இநத்தொடரில் ராயுடு முதல் பதிரான அனைத்து வீரர்களும் இணைந்து சென்னையின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் பேட்டிங் துறையில் நியூசிலாந்தை சேர்ந்த தொடக்க வீரர் டேவோன் கான்வே 672 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம். குறிப்பாக ஃபைனலில் 47 (25) ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் மேத்தியூ ஹெய்டன், மைக் ஹஸி போன்ற வெளிநாட்டு தொடக்க வீரர்கள் வரிசையில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது அந்த அணிய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

கனவு லெவன் அணி:
அதிலும் குறிப்பாக நீண்ட காலமாக செயல்பட்டு பெங்களூரு அணிக்காக கைமாறிய டு பிளேசிஸ் இல்லாத குறை தெரியாத அளவுக்கு அசத்திய அவர் ருதுராஜ் உடன் இணைந்து புதிய ஓப்பனிங் ஜோடியாக அசத்தினார். இந்நிலையில் 14 வருடங்களில் 12 சீசனங்களில் பிளே ஆப் சுற்றுக்கு சென்று 10 ஃபைனலில் விளையாடி 5 கோப்பைகளை வென்ற மகத்தான வரலாற்றை கொண்ட சென்னை அணியின் ஆல் டைம் கனவு அணியை டேவோன் கான்வே தேர்வு செய்துள்ளார்.

அதில் ஹெய்டன், மைக் ஹசி, முரளி விஜய் போன்ற மகத்தான சென்னை ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை கண்டுகொள்ளாத அவர் முதல் தொடக்க வீரராக சமீபத்திய சீசன்களில் அசத்தி வரும் ருதுராஜை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் 2வது தொடக்க வீரராக சிறப்பான டு பிளேசிஸை தேர்வு செய்துள்ள அவர் சின்ன தல என்று ரசிகர்கள் கொண்டாடும் சுரேஷ் ரெய்னாவுடன் மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயுடு மற்றும் மொயின் அலி ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

ஆனால் 5வது இடத்தில் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸை சம்பந்தமின்றி தேர்வு செய்துள்ள அவர் ட்வயன் ப்ராவோவை தேர்ந்தெடுக்காதது மிகப்பெரிய ஆச்சரியம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த வருடம் 16.25 கோடிக்கு வாங்கப்பட்டு வெறும் 2 போட்டியில் மட்டும் விளையாடி பெஞ்சில் அமர்ந்திருந்த பென் ஸ்டோக்ஸ் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து சென்னையின் வெற்றியில் ஒரு முறை கூட பங்காற்றியதில்லை.

மறுபுறம் 2011 முதல் 10 வருடங்களுக்கு மேலாக 150க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்த பிராவோ பேட்டிங்கிலும் சில மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்த நிலையில் அவரை கண்டுகொள்ளாத கான்வே ரசிகர்கள் மனதில் இன்றும் நிற்கும் அல்பி மோர்கலை ஓரளவு நியாயப்படி தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ரவீந்திர ஜடேஜாவை தேர்வு செய்துள்ள அவர் வரலாற்றில் ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலராக சாதனை படைத்த தமிழகத்தின் லக்ஷ்மிபதி பாலாஜியை மறக்காமல் தேர்ந்தெடுத்து தீபக் சஹரையும் சேர்த்துள்ளார்.

இதையும் படிங்க:என் கேரியர்ல அந்த 3 பேரை எதிர்கொள்ள ரொம்ப கஷ்டப்பட்டேன் – ஒரு இந்தியர் உட்பட 3 தரமான பவுலர்களை பாராட்டிய ஏபிடி

இருப்பினும் 2010, 2011 கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் தேர்ந்தெடுக்காததை பார்க்கும் ரசிகர்கள் சென்னைக்கு நீங்கள் புதுசு என்பது தெளிவாக தெரிவதாக கலாய்கின்றனர். மொத்தத்தில் டேவோன் கான்வே செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல் டைம் கனவு 11 பேர் அணி இதோ:
ருதுராஜ் கைக்வாட், ஃபப் டு பிளேசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், எம்எஸ் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அல்பி மோர்கல், லக்ஷ்மிபதி பாலாஜி, தீபக் சஹர்

Advertisement