இது வேறயா ! கல்யாணத்துக்காக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் சிஎஸ்கே வெளிநாட்டு வீரர் – முழுவிவரம் இதோ

CSK-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தைக் கடந்து பல பரபரப்பான தருணங்களுடன் மும்பை நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆரம்பத்திலேயே மிகப் பெரிய ட்விஸ்ட் வைத்தார் போல நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் தொடர் தோல்விகளால் 3 வாரங்களாக தொடர்ந்து கடைசி 2 இடங்களில் திண்டாடுகின்றன. அதிலும் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 6 போட்டிகளிலும் வரிசையாக தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10-வது இடத்தில் திண்டாடுகிறது.

மறுபுறம் இந்த தொடருக்கு முன்பாக 4 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் எம்எஸ் தோனி திடீரென பதவி விலகி அந்த பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த போதே அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. போதாகுறைக்கு 14 கோடியை செலவிட்டு வாங்கிய நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹரும் காயத்தால் விலகியது அதைவிட மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

- Advertisement -

கடைசி வாய்ப்பு:
தற்போதைய நிலைமையில் 6 தோல்விகளை பதிவு செய்த மும்பை அடுத்த 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றாலும் கூட பிளே ஆப் சுற்றுக்கு செல்வது 99% சாத்தியமற்றதாக உருவாகியுள்ளது. மறுபுறம் நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் விளையாடி வரும் சென்னை பங்கேற்ற 6 போட்டிகளில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் பெற்ற ஒரே ஒரு பொன்னான வெற்றியை வைத்து 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் தத்தளிக்கிறது. அதன் காரணமாக அந்த அணிக்கு எஞ்சியுள்ள 8 போட்டிகளிலும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறும் பட்சத்தில் கண்டிப்பாக பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.

ஆனால் 8 க்கு 8 வெற்றி என்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்பதால் அந்த அணியும் மும்பையை தொடர்ந்து லீக் சுற்றுடன் நடையைக் கட்டப்போகும் 2-வது அணியாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் மும்பையும் சென்னையும் மோதுகிறது. அதில் மும்பை தோற்றால் நேரடியாக இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் அணியாக வெளியேறிவிடும். சென்னை தோற்றாலும் அதே கதிதான் என்பதால் இந்த முக்கியமான போட்டிக்கு அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

கான்வேக்கு கல்யாணம்:
இந்த நிலைமையில் சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நியூசிலாந்தைச் சேர்ந்த தொடக்க வீரர் டேவோன் கான்வே தனது திருமணத்திற்காக ஐபிஎல் 2022 தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற உள்ளார். தற்போது 30 வயதை கடந்த அவர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜோகனஸ்பர்க் நகரில் பிறந்தவர். அதன்பின் நியூசிலாந்து நாட்டிற்கு குடிபெயர்ந்த அவர் அங்கு உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதன் வாயிலாக 3 வகையான நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் தொடக்க வீரராக களமிறங்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

அதே சமயம் தனது தோழியான கிம் வாட்சனை அவர் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் தற்போது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அந்த செய்தியை கேட்ட சென்னை அணி நிர்வாகம் நேற்று அவரின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு சிறப்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் எம்எஸ் தோனி உள்ளிட்ட அனைத்து முக்கிய வீரர்களும் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையை அணிந்து டேவோன் கான்வேவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

- Advertisement -

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அவரின் காதலிக்கும் அவருக்கும் வீடியோ கால் வாயிலாக ஒரு சிறிய அளவிலான நிச்சயதார்த்தம் கூட செய்து வைக்கப்பட்டது. இந்த கலகலப்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பறக்கும் கான்வே:
இதை தொடர்ந்து தனது திருமணத்திற்காக அவர் தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வாழ்வின் மிகவும் முக்கியமான அந்த சிறந்த தருணத்தை முடித்துக் கொண்டு வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி மீண்டும் இணையும் அவர் கட்டுப்பாட்டு விதிமுறைப்படி 3 நாட்கள் தனிமைப் படுத்தப் படுவார். எனவே அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கான வீரர்களின் தேர்வில் அவரது பெயர் இருக்காது. இதன் காரணமாக குறைந்தது அவரால் 2 போட்டிகளுக்கு விளையாட முடியாது.

இதையும் படிங்க : பஞ்சாப்பை அடித்து நொறுக்கிய டெல்லி பெரிய வெற்றி! குவியும் பாராட்டு – எதற்கு தெரியுமா?

இருப்பினும் இந்த வருடம் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் மட்டும் ஓப்பனராக வாய்ப்புப் பெற்ற அவர் 3 ரன்கள் எடுத்த காரணத்தால் அதற்கு அடுத்த போட்டியில் இருந்து பெஞ்சில் அமர வைக்கப்பட்டு அவருக்கு பதிலாக ராபின் உத்தப்பா விளையாடி வருகிறார். எனவே அவரின் இந்த திருமண நிகழ்வு சென்னை அணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement