இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இதுவரை தாங்கள் விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இன்னும் லீக் சுற்று போட்டிகளில் மூன்று ஆட்டம் எஞ்சியுள்ள வேளையில் ஒரு வெற்றி பெற்றால் கூட பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினை உறுதி செய்துவிடும்.
பெங்களூரு அணியில் இருந்து வெளியேறிய தேவ்தத் படிக்கல் :
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு சீசனிலும் கோப்பையை கைப்பற்றாத பெங்களூரு அணியானது இம்முறை விராட் கோலிக்காக 18-வது சீசனை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அந்த வகையில் இந்த சீசனின் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியான சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் அந்த அணி தற்போது பிளே ஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது.
இதனால் தற்போது வரை பலமான அணியாக பார்க்கப்படும் ஆர்.சி.பி நிச்சயம் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பெங்களூரு அணியானது இறுதிகட்ட போட்டிகளை நெருங்கி வரும் வேளையில் அந்த அணியின் நட்சத்திர வீரரான தேவ்தத் படிக்கல் எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல் 247 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திடீரென படிக்கல் விலக காரணம் யாதெனில் : அவருக்கு கடைசியாக நடைபெற்று முடிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது காயம் ஏற்பட்டதால் அவர் அதற்கு அடுத்ததாக பயிற்சிகளை மேற்கொள்ளவில்லை.
மேலும் தொடர்ச்சியாக அவரது காயத்தின் தன்மையை சோதிக்கும் போது இந்த ஆண்டு எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாட முடியாது என்றும் அதன் காரணமாகவே அவர் விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி இந்த தொடரின் கடைசி சில போட்டிகளில் இருந்து அவர் விலகிய வேளையில் அவருக்கு பதிலாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரரான மாயங்க் அகர்வால் பெங்களூரு அணிக்குள் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் திடீர்னு ரிட்டையராக இதான் காரணம்.. ஹிட்மேனை எல்லாரும் மிஸ் பண்ணுவோம்.. சேவாக் பேட்டி
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகால அனுபவம் பெற்ற அவர் சில ஆண்டுகாலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் இன்றி மாநில அணிக்காகவும் பல்வேறு போட்டிகளை கேப்டனாக வெளிநடத்தியுள்ள அவர் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதனால் அவரது சேர்க்கை தற்போது பெங்களூரு அணிக்கு பலத்தினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



