இதுவரை நடந்து முடிந்த 10 ஐபிஎல் சீசன்களிலும் பெரிதாக சோபிக்காத அணி. இதுவரை ஒரு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெற்றதில்லை என்பது டெல்லி அணி ரசிகர்களுக்கு வேதனையைத்தர கூடிய விஷயம் தான்.டெல்லி அணி மட்டுமில்லாமல் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் இதுவரையிலும் எந்த ஐபிஎல்-யிலும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே இந்த மூன்று அணியினருக்கும் மற்ற அணிகளை விட இந்த ஐபிஎல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தாண்டு முதல் இதுவரையிலும் ஐபிஎல் தொடர்களில் கொல்கத்தா அணியை வெற்றிகரமாக வழிநடத்திவந்த கம்பீர் இந்த ஆண்டு முதல் டெல்லி அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி செல்ல உள்ளார்.கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றதில் கவுதம் கம்பீருக்கு பெரும் பங்கிருந்தது.
ஐபிஎல் தொடரின் திறமையான கேப்டனான கவுதம் கம்பீர் இந்தாண்டு டெல்லியை வழிநடத்தவுள்ளதால் இந்த வருட ஐபிஎல் கோப்பையை டெல்லி அணி வெல்லும் என அந்த அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூறினார்.மேலும் ரிக்கி பாண்டிங் பேசுகையில் “கடந்தகாலங்களை பற்றி கவலை இல்லை. இந்தாண்டு புதிய வீரர்கள் களத்தில் உள்ளனர்.
புதிய கேப்டன் அணியை வழிநடத்தவுள்ளார். வீரர்கள் அனைவரும் கடுமையான பயிற்சிகளின் மூலம் தங்களை தயார் படுத்திக்கொண்டு உள்ளனர். போட்ட திட்டங்களை களத்தில் சரியாக செயல்படுத்தினால் நிச்சயம் கோப்பையை வெல்லலாம்” என்றார்.
முன்னதாக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான ரபேடா கடுமையான முதுகுவலி காரணமாக இந்த ஐபிஎல் சீசனிலிருந்து விலகியுள்ளார்.உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரபேடா.இந்த ஐபிஎல் சீசனுக்காக ரபேடாவை 4.2 கோடி ரூபாய் தந்து ஏலம் எடுத்திருந்தது டெல்லி அணி.ரபேடாவின் இந்த இழப்பை டெல்லி அணியின் இளம்வீரர்கள் ஈடுசெய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.