ஐபிஎல் 2024 : காயத்தால் விலகிய லுங்கி நிகிடிக்கு பதிலாக.. மாஸ் ஆஸ்திரேலிய வீரரை வாங்கிய டெல்லி

Lungi Nigidi
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. வரலாற்றில் 17வது முறையாக நடைபெறும் இந்த தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. அதில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் இலட்சியத்துடன் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் மீண்டும் விளையாட உள்ளது மிகப் பெரிய பலமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி அணிக்காக புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி காயமடைந்துள்ளதால் ஐபிஎல் 2024 தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் விளையாடாத அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

அசத்திய டெல்லி:
மேலும் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஜேக் பிரேசர்-மெக்குர்க் தங்களுடைய அணியில் ஒப்பந்தம் செய்யப்படுவதாகவும் டெல்லி நிர்வாகம் அறிவித்துள்ளது. வெறும் 21 வயதாகும் அவர் இதுவரை 37 டி20 போட்டிகளில் விளையாடி 133.54 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் தொடரின் போட்டியில் 10 பவுண்டரி 13 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் வெறும் 29 பந்துகளில் சதமடித்தார்.

அதனால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற தென்னாபிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் உலக சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்து முதல் முறையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து 2024 பிக்பேஷ் தொடரில் 257 ரன்களை 158.64 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்த அவர் ஆஸ்திரேலியாவுக்காக சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.

- Advertisement -

அதில் 2 இன்னிங்ஸில் 51 ரன்களை 221.73 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள அவர் துபாயில் நடைபெற்ற ஐஎல்டி 20 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக இந்த வருடம் 3 போட்டிகளில் விளையாடினார். அந்த வகையில் அதிரடியாக விளையாடும் திறமையை பெற்றுள்ளதை அறிந்த டெல்லி நிர்வாகம் தற்போது ஐபிஎல் தொடரிலும் அவரை 50 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு வாங்கியுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்கள் திருந்தனும்.. தோனியை பற்றி கம்பீர் சொன்னது உண்மை தான்.. பிரவீன் குமார் பேட்டி

மொத்தத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய வெளிநாட்டு வீரரை டெல்லி வாங்கியுள்ளதை அந்த அணி ரசிகர்கள் வரவேற்கின்றனர். இதைத் தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி டெல்லி தங்களுடைய முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement