மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடந்த 29-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் குஜராத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகிய நிலையில் கேப்டனாக செயல்பட்ட ரஷீத் கான் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு ராபின் உத்தப்பா 3 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த மொய்ன் அலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

இதனால் 32/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு அடுத்ததாக களமிறங்கிய அனுபவ வீரர் அம்பத்தி ராயுடு மற்றொரு இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் உடன் இணைந்து சரிந்த சென்னையை மீட்டெடுக்க முயன்றார். 4-வது விக்கெட்டுக்கு பொறுப்பாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த இந்த ஜோடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு சென்னையை மீட்டெடுத்த போது 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 46 (31) ரன்கள் எடுத்து ராயுடு அவுட்டானார்.
பார்முக்கு திரும்பிய ருதுராஜ்:
மறுபுறம் முதல் 5 போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி கடும் விமர்சனத்தை சந்தித்த ருதுராஜ் கைக்வாட் இந்த போட்டியில் பொறுப்புடனும் அதேசமயம் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 48 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட 73 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பினார். கடைசி நேரத்தில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 2 சிக்ஸர் உட்பட 22* (12) ரன்களும் சிவம் துபே 19 (17) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்த சென்னை 169 ரன்கள் எடுத்தது. குஜராத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 170 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சுப்மன் கில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்த ஓவரிலேயே தமிழக வீரர் விஜய் சங்கரும் டக் அவுட்டாகி அதைவிட அதிர்ச்சி அளித்தார். அதற்கடுத்த ஓவரில் இளம் வீரர் அபினவ் மனோகரும் 12 (12) ரன்களில் நடையை கட்டியதால் 16/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய குஜராத் மோசமான தொடக்கத்தை பெற்றது.
மிரட்டிய மில்லர்:
அதனால் தடுமாற்ற பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் ரித்திமான் சாஹாவும் 11 (18) ரன்களில் அவுட்டானதால் 48/4 திண்டாடிய குஜராத்தின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த நேரத்தில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் நீண்ட நாட்களுக்கு பின் பழைய பன்னீர்செல்வமாக சந்தித்த முதல் பந்திலிருந்தே பவுண்டரிகளை பறக்க விட்டு சென்னைக்கு மிகப் பெரிய தொல்லை கொடுத்தார். இடையில் ராகுல் திவாடியா 6 (14) ரன்களில் அவுட்டானாலும் அதற்காக அசராத அவர் தொடர்ந்து அதிரடி சரவெடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அதுவரை சிறப்பாக செயல்பட்ட சென்னை பவுலர்களை தாறுமாறாக புரட்டி எடுத்தார்.

அவருக்கு ஜோடியாக கைகோத்த கேப்டன் ரஷித் கான் தனது பங்கிற்கு கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை விளாசி சென்னைக்கு தொல்லை கொடுத்தார். குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் வீசிய 18-வது ஓவரில் 6, 6, 4, 6, 1, 2 என 20க்கும் மேற்பட்ட ரன்களை அவர் அடித்ததால் சென்னையின் வெற்றி கேள்விக்குறியானது. இறுதியில் வெறும் 21 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் உட்பட 40 ரன்களை மிரட்டலாக எடுத்த ரசித் கான் தனது வேலையை முடித்து விட்டு சென்றார். அதனால் கடைசி 3 ஓவர்களில் சென்னையின் தோல்வி கேள்விக்குறியானது. அதை பயன்படுத்தி மறுபுறம் அவுட்டாகாமல் தொடர்ந்து அடம்பிடித்த டேவிட் மில்லர் கடைசி வரை அவுட்டாகாமல் வெறும் 51 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 94* ரன்கள் குவித்து மாஸ் பினிசிங் கொடுத்தார்.
மண்ணை போட்ட குஜராத்:
அதன் காரணமாக 19.5 ஓவர்களில் 170/7 ரன்களை எடுத்த குஜராத் 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 94* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய டேவிட் மில்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது வெற்றியை பதிவு செய்த குஜராத் 10 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆனால் இதன் காரணமாக பிளே ஆஃப் சுற்று கனவைக் கண்டு கொண்டிருந்த சென்னையின் ஆசையில் குஜராத் மண்ணைப் போட்டுவிட்டது என்றே கூறலாம். ஏனெனில் மறுபுறம் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டு ஆரம்ப கட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய சென்னை கடைசி நேரத்தில் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கியதால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து 9-வது இடத்தை வலுவாக பிடித்துள்ளது. இனிமேல் எஞ்சிய 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதற்கு சாத்தியம் குறைவு என்பதால் மும்பையை தொடர்ந்து இந்த வருடம் லீப் சுற்றோடு நடையைக் கட்டும் 2-வது அணியாக சென்னை இப்போதே மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு தயாராக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.



