இந்தியாவை ஜெய்க்க வைத்த தொடர்நாயகி லேடி யுவ்ராஜ்.. தீப்தி சர்மா யாருமே செய்யாத 2 தனித்துவமான உலக சாதனை

- Advertisement -

ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்தியா தங்களது சொந்த மண்ணில் வென்று சாதனை படைத்துள்ளது. நேற்று நவி மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது.

அந்த வெற்றிக்கு சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா தொடர் முழுவதும் அபாரமாக விளையாடி முக்கிய பங்காற்றினார். குறிப்பாக இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் 58 ரன்கள் அடித்த அவர் பந்து வீச்சில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக ஒரு ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் கிரிக்கெட்டர் என்ற உலக சாதனையை தீப்தி படைத்துள்ளார்.

- Advertisement -

தீப்தி 2 உலக சாதனை:

இதற்கு முன் ஆடவர் அல்லது மகளிர் உலகக் கோப்பைகளில் நாக் அவுட் போட்டியில் யாருமே 50+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்ததில்லை. அது மட்டுமின்றி ஒரு உலகக்கோப்பை போட்டியில் 50+ ரன்கள் 5 விக்கெட்டுகள் எடுத்த 2வது இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2011 உலகக் கோப்பையில் யுவ்ராஜ் சிங் அயர்லாந்துக்கு எதிராக அச்சாதனை படைத்ததை ரசிகர்களால் மறக்க முடியாது.

இது போக 2025 மகளிர் உலகக் கோப்பையில் தீப்தி சர்மா மொத்தமாக பேட்டிங்கில் 7 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் உட்பட 215 ரன்கள் அடித்துள்ளார். பந்து வீச்சில் 9 இன்னிங்ஸில் 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதன் வாயிலாக ஒரு ஐசிசி உலகக் கோப்பையில் 200+ ரன்கள் மற்றும் 20+ விக்கெட்டுகள் எடுத்த முதல் கிரிக்கெட்டர் என்ற உலக சாதனையையும் தீப்தி படைத்துள்ளார்.

- Advertisement -

லேடி யுவ்ராஜ் தீப்தி:

இதற்கு முன் ஆடவர் அல்லது மகளிர் உலகக் கோப்பையில் யாருமே ஒரே தொடரில் 200+ ரன்கள் மற்றும் 20+ விக்கெட்டுகள் எடுத்ததில்லை. அத்துடன் ஒரு மகளிர் உலகக் கோப்பையில் 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் தீப்தி சர்மா சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. லின் புல்ஸ்டன் (ஆஸ்திரேலியா): 23 (1982)
2. தீப்தி சர்மா (இந்தியா): 22* (2025)
2. ஜேக்கி லார்ட் (நியூஸிலாந்து): 22 (1982)
3. சோபி எக்லஸ்டன் (இங்கிலாந்து): 21 (2022)

இதையும் படிங்க: இதயம் சொன்னதை செஞ்ச ஷபாலிக்கு இதனால தான் பவுலிங் கொடுத்தேன்.. வரலாற்று வெற்றி பற்றி ஹர்மன்ப்ரீத்

இப்படி பல சாதனைகளைப் படைத்த அவர் ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் தொடர்நாயகி விருதை வென்றுள்ளார். 2011 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய யுவ்ராஜ் தொடர்நாயகன் விருது வென்றதை மறக்க முடியாது. தற்போது அதே விருதை வென்றுள்ள தீப்தியை லேடி யுவ்ராஜ் என்றால் மிகையாகாது.

Advertisement