வரலாற்று சாதனை படைத்த தீப்தி சர்மா.. இந்திய மகளிரணிக்கு பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா

Deepti Sharma
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 7ஆம் தேதி இரவு நவி மும்பையில் நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் போராடி 130/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு சஃபாலி வர்மா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா 23, ஜெமிமா ரோட்ரிகஸ் 13 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

அசத்தல் 2 சாதனை:
அதே போல மிடில் ஆர்டரில் ஹர்மன்பிரீத் கௌர் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் ரிச்சா கோஸ் அதிரடியாக 23 (19) தீப்தி சர்மா 30 (27) ரன்கள் எடுத்த போதிலும் நல்ல ஃபினிஷிங் கொடுக்க தவறினார்கள். மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கிம் கிராத், சதர்லாந்து, ஜார்ஜியா வாரகம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 131 என்ற சுலபமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் அலிசா ஹீலி 26 (21) பெத் மூனி 20 (29) ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த டகிலா மெக்ராத் 19 ரன்களில் அவுட்டானாலும் நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி அதிரடியாக 3 பவுண்டரி 2 சிக்சருடன் 34* (21) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் லிட்ச்பீல்ட் 18* (12) ரன்கள் எடுத்ததால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.

- Advertisement -

அதனால் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலியா 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. அதன் காரணமாக இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இருப்பினும் இப்போட்டியில் 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக வெற்றிக்கு போராடிய தீப்தி சர்மா சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற தனித்துவமான வரலாற்று சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – ஏகப்பட்ட மாற்றங்கள் இதோ

அந்த வகையில் இந்தியா தோற்றாலும் அவர் படைத்த சாதனை மட்டுமே ரசிகர்களுக்கு இப்போட்டியில் ஆறுதலாக அமைந்தது. இதை தொடர்ந்து சமனில் இருக்கும் இந்த தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி போட்டி வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement